Saturday, May 03, 2008

பயணப் பக்கங்கள்...

அமெரிக்காவில் தனிமையில் அலைந்து திரிந்த நாட்களில் ,Detroit நகரில் ஒரு தெரு ஓர உணவு விடுதியில் அமர்ந்து எழுதி முடிக்காமல் விட்ட பக்கங்களை இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாய் முடித்து கீழே நிரப்பி இருக்கிறேன்... நாம் எழுதி என்றோ தொலைத்து விட்ட பக்கங்களை மீண்டும் படிப்பதில் இரண்டு விஷயங்கள் எனக்கு பிடிக்கும்.. ஒன்று, மீண்டும் மலரும் நினைவுகள்.. இரண்டு, நம் எழுத்துக்களை அந்த இடைவெளி முதிர்ச்சியோடு படிக்கையில் நம் எழுத்துகளை(நம்மை ) நாமே எடை பார்க்க ஒரு வாய்ப்பு... எப்பொழுதும் நகைப்புக்கும் , எப்பொழுதாவது நிறைவிற்கும் என்னிடமே நான் ஆளாவேன்..

இப்பொழுது..

இந்த அமெரிக்கப் பயணம் என்னை மாற்றி விடவில்லை,
என் பார்வையைமாற்றி இருக்கிறது .

எல்லை தாண்டி விட்டால் , எல்லைகள் மாறி விடுகின்றன.
மனம், திருமணம், காதல், கல்வி, கடவுள் , எல்லாம் மாறி விடுகின்றன.

அங்கே பூசி மெழுகப் பட்டவை இங்கே பிரித்து மேயப் படுகின்றன.
அங்கே தூரத்தில் மறைக்கப் பட்டவை, இங்கே துரத்தி படிக்கப் படுகின்றன.

ஆனாலும், சொந்தம், பாசம், விழா, எல்லாவற்றிக்கும் இந்த மனங்களும் ஏங்கத்தான் செய்கின்றன.

நண்பர்கள் தான் இங்கே சொந்தங்கள். மணமோ, மரணமோ, கூடி நிற்பது நட்புதான்.

சொந்தம் என்பது பெயருக்குத்தான். அட, உண்மையிலேயே 'பெயருக்குத்தான்' !

"இந்தியாவின் கலாச்சாரம் பற்றி படித்திருக்கிறேன்!"
"நான் ஒரு முறையாவது இந்திய மண்ணை மிதிக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் !"
" காந்தியை நான் மதிக்கிறேன், அவர் எத்தனை உயர்வான மனிதர்!"
"நான் யோகா கற்கிறேன் !"
"நமஸ்தே!!! :-) "

நான் சென்ற இடங்களில் எல்லாம் அமெரிக்கர்கள் மறக்காமல் கூறியது இவை தான்.

முன்பு வந்த பொழுது இவ்வளவு கூட்டமில்லை. இந்த முறை தெருவில் நடக்கும் பொழுது ஒரு இந்தியரையாவது உரசாமல் போய்ச்சேர முடியாது என்னுமளவுக்கு இந்திய அம்பிகளும், நங்கைகளும் பார்க்க முடிகிறது.

கோவில்களும், தெய்வங்களும் எதற்காக உருவாகி இருக்கலாம் என்பது நிச்சியமாக இங்கே தெரிகிறது . Detroit நகரில் ஒரு தமிழ் தம்பியை கண்டுபிடிக்க வேண்டுமானால், வெள்ளிக்கிழமை Detroit பராசக்தி கோவிலில் காத்திருந்தால் போதும். அதேதான் எந்த ஒரு இந்திய வம்ச ஆசாமியை கண்டு பிடிக்கவும் . அவரவர் கோவிலில் கட்டாயம் ஆஜராகி விடுகிறார்கள்.

எல்லாப் பிள்ளைகளும் பரதநாட்டியம் கற்கின்றன, எல்லாப் பயல்களும் வயலின் , மிருதங்கம் ஏதாவது.

இந்தியாவில் கலைகள் தெருப் பிள்ளைகள் போல இளைத்து கிடந்தாலும், இங்கே பரவாயில்லை 'Whole Milk' குடிக்கும் புஷ்டியான அமெரிக்கப் பாப்பாவாக நன்றாகவே இருக்கின்றன.

வருடத்திற்கு பத்து கச்சேரி , ஆறு அரங்கேற்றம் என்று வித்வான்கள் வறுமை இல்லாமல் தங்கள் டாக்டர், engineer வேலைகளையும் நன்றாகவே பார்த்துக் கொள்கிறார்கள்.

அமெரிக்காவில் வாழும் அமெரிக்கர்கள் பற்றி தொடங்கி அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு எப்படியோ இந்த கட்டுரை மாறி விட்டது.

இங்கு அலுவலகத்தில் 'SIR' கிடையாது. பள்ளிகளிளும்தான். 'Chris', 'Mr.Brandon','Ms.Shelly' என்றாலே போதும். 'SIR' எனும் வார்த்தை கோபத்தில் ஒருவரை கூப்பிடவும், காவல்துறையினை அடைமொழிக்கவும்தான்.

நமது மரியாதைக்குரிய 'SIR' இங்கே கோபம் காட்ட மட்டுமே உபயோகம்.

உயர் அதிகாரியை பார்த்தால் எழுந்து மரியாதை செய்யத் தேவை இல்லை. பள்ளிகளில் மாணவர்கள் தான் ஆசிரியர் இருக்கும் அறைக்கு சென்று படிக்க வேண்டும். நம் ஊரைப்போல் ஆசிரியர் சென்று மாணவனை தேட வேண்டிய நிலை இல்லை.

இடது இங்கே வலது. வலம், இடம். எல்லாம் கடந்து இங்கே எனக்கு பிடித்தது ஒன்றே ஒன்று தான். 3 மணி நேரமாய் இந்த உணவகத்தில் எதுவுமே order செய்யாமல் உட்கார்ந்து இருந்தும் , புன்னகையுடன் எனக்கு தண்ணீர் வைத்து விட்டு அவர்கள் வேலையை பார்த்து கொண்டு இருக்கும் மனிதனை மனிதன், ஒரு மனிதனின் தனிமையை மனிதன், ஒரு மனிந்தனின் சுதந்திரத்தை மனிதன் மதிக்கும் பண்புதான்.

என் உடை பற்றி, என் நடை பற்றி, என் உடல் பற்றி யாருமே இங்கு கவலை கொண்டவர்கள் இல்லை. நான் என்ன எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று யாரும் கவலை கொள்ளவில்லை. இதுதான் எனக்கு மிகவும் ஆனந்தம் தருவதாய் அமைகிறது. இந்தியாவிலும் மக்கள் இது போல அடுத்தவர் அந்தரங்கத்தில் கவலை கொள்ளாது தம் வேலைகளை பார்த்தாலே பாதி சிக்கல்கள் இல்லை. ஹ்ம்ம்..

இந்தச் சூழலில் மணிக் கணக்காய் எழுதிக்கொண்டே இருக்கலாம்.... ஆனால் எனக்கு பக்கத்து மேசையில் உள்ள இளம் அமெரிக்க ஜோடி ஏதோ ஊடலில் மூழ்கி உள்ளார்கள்.. அது என்னவாய் இருக்கும்? இருங்கள், சற்று நேரம் உற்று கேட்டு விட்டு வந்து தொடர்கிறேன்.. ;-)