Wednesday, February 17, 2010

--


என் வலைப்பூ பூத்து வெகுநாள் ஆகி விட்டது. சுஜாதா நினைவு நாள் (27/02) கட்டுரைகள் குமுதத்திலும், விகடனிலும், பூக்க ஆரம்பித்து விட்டன.. படிக்கையில் சிறிய சோகம்...

நேற்று சன் தொலைக்காட்சியில் 'முதல்வன்' படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.. அர்ஜுன் ஒருநாள்-பதவி ஏறி / இறங்கி அன்று இரவு அவர் வீட்டில் கரண்ட் , தண்ணீர் எல்லாம் நின்று விடும்.. அவரின் அம்மா குழாயை திருகியபடி "நம்ம வீட்ல மட்டும்தான் கரண்ட் இல்லை" என்று சொல்லிக்கொண்டே , "தண்ணியும் வரலையே ... மாமி, உங்க வீட்ல தண்ணி வருதா?" என கேட்க, அவருக்கு பின்னால் பக்கத்து வீட்டு மாமி செடிகளுக்கு தண்ணீர் சொரிந்து கொண்டே "வர்றதே! " என்னும் காட்சி 'direction' -இல் அடங்குமா , திரைக்கதையா, என்றெல்லாம் இனம்பிரிக்கும் முன்னமே, சுஜாதா தான் என் கண் முன்னே தோன்றினார்..
பாவம் ஷங்கர், கமல் மற்றும் பலர்..

கூகுல் குரோம் உபயோக ' படுத்தும்' லட்ச கணக்கான பொறுமைசாலிகளில் நானும் ஒருவன்... சத்தியமாய் குரோம் உபயோகத்தால்தான் பதிவுகள் போடுவது குறைந்துவிட்டது.... குரோமில் வலைப்பூ எழுத 'unicode ' தமிழ் வசதி தோன்றாது, ஆதலால் குரோமில் வேலை செய்கையில் பதியும் மனம் வந்தால் கூட, மீண்டும் 'firefox ' திறந்து, கடவு கொடுத்து, பதிந்து,......... அதற்குள் சொல்ல நினைத்த செய்தி/மனநிலை மறந்து/ மாறி விடும் ,

மேலும், கோப்புகளை பதிவிறக்காமல் வெறுமனே பார்த்து விட்டு அழித்து விடும் வசதியையும் நீக்கி விட்டிருக்கிறார்கள். - ஒன்று,கோப்புகளை என் கணினியில் பதிந்தாக வேண்டும், இல்லையெனின் குரோம் எப்படி காட்டுகிறதோ அப்படித்தான் பார்த்தாக வேண்டும்..

ஒரு நாளைக்கு பல முறை வலைதள-வடிவமைப்புகளை பார்த்து சரி செய்யும் பனி எனக்கு இருப்பதனால் கூகுளின் செல்லப் பிள்ளையால் ஒவ்வொரு மாலையும் என் 'desktop' (யாரேனும் தமிழாக்கம் தரவும்..) பரிதாபகரமான என் நிஜ மேசையை போலவே காட்சி அளிக்கிறது..

கூகுல் புதுமைகள் பல படைப்பதும், ' இலவசங்கள் ' பல அளிப்பதும் நம்மை கூகுல் மேல் தீராத காதல் கொள்ளச் செய்திருக்கிறது.. அதனால்தான் ஆரம்பத்தில் கூகுளின் பிரம்மாண்ட திட்டங்களையும், இலவசங்களையும் கண்டு மயங்கிய நாம், இன்றுவரை அதன் படைப்புகளின் குறைகளையும் கஷ்ட்டப்பட்டு விழுங்கியபடி சிரித்து/சகித்து கொண்டிருக்கிறோம்...

தேடலும், முகவரிப்பட்டையும் ஒன்றாய் இருப்பதை தவிர, குரோமில் வேறு எதுவும் சிறப்பாக இருப்பதாய்ப் படவில்லை.. தகவல்களை பார்ப்பது, தனிமை அமைப்புகள் சரி பார்த்தல் , இணைய உலா விபரங்கள் நீக்குதல் , உட்பட எதுவுமே எளிமையாக அளிக்கப்பட வில்லை...

இதை என் இவ்வளவு ஆராய்கிறேன் , கூகுல் மேல் ஏதேனும் கோபமா என்றெல்லாம் நினைக்கலாம், ஆனால் இதை நினைத்துப் பார்த்ததில் , நம் நாட்டின் திருமணங்கள் ஓரளவு வெற்றி பெறுவதன் ரகசியமும், அரசியல்வாதிகள் பேரளவு வெற்றி பெறுவதன் அப்பட்டமும், இன்னும் சில விஷயங்களும் இது மூலம் எனக்கு பிடிபட்டன..

௧. மனம் புதியதை விரும்புகிறது.. நாம் அனுபவித்துக்க் கொண்டிருக்கும் பொருள்/ வாழ்கை/ சேவை நன்றாகவே இருந்தாலும், புதியது ஒன்று தோன்றினால் மனம் அலைபாய்கிறது..

௨. 'இலவசம்' என்ற சொல் எல்லாரையும் மயக்கும் மந்திரம்...

௩. இவை இரண்டும் (புதுமை/இனாம் ) இருந்தால் மற்ற பிற குறைகள் எல்லாம் கண் மறைந்து விடும்...

எங்கோ தொடங்கி, எங்கோ முடிப்பதே என் போக்கு என, என் ஒன்றிரண்டு பதிவை படித்தவர்களுக்கே நன்றாக தெரிந்திருக்கும்..

சொல்லத்தோன்றும் விஷயங்கள் நிறையவும், நேரம் குறைவாகவும் இருப்பதுதான் காரணம் என்று நினைக்கிறேன்... கோர்வையாக எழுத முயன்றுகொண்டுதான் இருக்கிறேன்... பார்க்கலாம்...குறிப்பு: தோழி இனியா சுட்டியதை மனதில் வைத்து முடிந்த அளவுக்கு தமிழ்சொற்களை பயன்படுத்த முயற்சித்திருக்கிறேன்.. அதையும் மீறி ஆங்கிலச்சொற்கள் தோன்றி இருப்பதற்கு மறுபடியும் கூகுளைத்தான் குறை கூறுவேன்.. :-)
அவர்கள் தமிழ் அகராதியில் இன்னும் சேர்க்க வேண்டும்..!

பி. கு: என் கணினியில் இருந்து குரோமை அழித்துவிட்டேன் .. :-) வாழ்க நெருப்புநரி!(firefox), வாழ்க தமிழ்!!, வாழ்க என் வலைப்பூ!!! ... ஹீஹீ...

பி.பி.கு: இனி பதிவுகள் போடாமைக்கு குரோமை குறை சொல்ல முடியாது... அதனால் வேறு காரணங்கள் தேட வேண்டிஇருப்பதால், மறு பதிவு போட சிறிது காலம் ஆகலாம்.. :-)

No comments: