Monday, February 22, 2010

முயற்சி 1 :


விடு வில்லின்
பழிச் சொல்லின்
கொடி யல்லின்
பகை கள்ளின்
முகம் கண்டு
பயம் இல்லை.

மிகை செல்வம்
புகழ் கர்வம்
கெடு சொந்தம்
மகர் போகம்
தனைக் கண்டு
பயம் உண்டு .

விளக்கம்:

என் மீது எய்யப்படும் அம்புகளைக் கண்டும், என் மீது கூறப்படும் இழிவான சொற்களைக் கண்டும், கொடிய துன்பங்களைக் கண்டும், பகைவர்களின் கள்ளம் கண்டும்/ பகைக்கும் கள்வர்களைக் கண்டும் எனக்கு பயம் தோன்றுவது இல்லை.

ஆனால், அளவுக்கு அதிகமான செல்வம், பிறர் புகழ்ச்சிக்கு மயங்கி அதனால் உண்டாகும் கர்வம், நமக்கு தீமை நினைக்கும் உறவினர்/சுற்றத்தார், பல பெண்கள் மீதான தவறான மோகம், இவ்வாறான தீயவற்றைக் கண்டே பயம் கொள்கிறேன்.




முயற்சி 2:


பகைக் கொல்லின்
பழி சொல்லின்
துணை இல்லின்
தொடர் அல்லின்
துயர் இல்லை.

புகழ் நானின்
சிகை கூனின்
புறம் கா-நின்
அறம் வீணின்
உயிர் இல்லை.


விளக்கம்:

பகைவர்கள் என்னை கொன்றாலும், அவதூறு செய்து பழிகள் சொன்னாலும், என் பக்கம் துணையேதும் இல்லாமல் நான் தனி ஆனாலும், தொடர்ந்து அல்லல்கள், இன்னல்கள் தோன்றினாலும், எனக்கு அதனால் துயரம் ஏற்படுவது இல்லை.

ஆனால், என் புகழுக்கு ,நன் மதிப்புக்கு இழுக்கு சேர்ந்தால், நான் நாணத்தால் கூனி , பகைவர் முன் தலை வணங்கும் நிலை தோன்றினால், என் முதுகை நீங்கள் காண நேரிட்டால் (புறமுதுகிட்டு ஓடும் நிலை வந்தால்), என் அறத்தில் பிழை ஏற்பட்டு நான் தவறிழைக்க நேர்ந்தால், நான் அதன் பிறகு உயிர் வாழ மாட்டேன் , துயரத்தில் மரிப்பேன்.



குறிப்பு: இலக்கியம் எழுத வேண்டும் என்றில்லை.. இலக்கியத்தனமாக ஏதேனும் எழுதமுடியுமா என்ற முயற்சி...