Thursday, July 15, 2010

?

வாம்மா துரையம்மா... இது வங்கக் கரையம்மா....

சில நாட்களாக என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் பாடல்... மதராசப்பட்டினம் படம் பார்த்தேன்... நல்ல படம். சில இடங்கள் நெஞ்சை நெகிழ்விப்பதாக இருந்தன... பல இடங்களில் இயக்குனர் அந்தக் கால மக்களை சித்தரிப்பதில் உரிமை எடுத்துக் கொண்டிருந்தாலும், மனம் ஒரு நல்ல படம் பார்த்த மகிழ்ச்சியோடு திரையரங்கை விலகினேன்...

கொச்சின் ஹனிபா என்ற ஒரு நல்ல நடிகனின் கடைசிப் படம்.. இன்னும் சில காலம் இருந்திருக்கலாம்...

இந்த பதிவு அந்த படத்தை பற்றியதோ, இல்லை எனக்குப் பிடித்த கொச்சின் ஹனிபா பற்றியதோ இல்லை.. அவரைப் பற்றி வேறொரு நாள் எழுத முயல்வேன்...

இந்த பதிவு, படம் முடிந்து இதோ என் அறையில் பாடல் முணுமுணுத்த படி யோசிக்க வைத்துக்கொண்டிருக்கும் இந்த தனிமையைப் பற்றி.. நம் வாழ்வின் பதிவுகள் நாளை எப்படி எங்கே இருக்கும் என்பதைப் பற்றி...

ஐம்பது வருடங்கள் கழிந்தால் ஒளி யாருடைய நினைவில் இருப்பான், யாருடைய நினைவிலும் இருப்பானா என்பதை பற்றி...

இன்றிருக்கும் என் நண்பர்கள், அன்று எப்படி இருப்பார்கள் என்பதைப் பற்றி... வாழ்க்கை இன்னும் என்னென்ன ஆச்சர்யங்களை, ஏமாற்றங்களை, அதிர்ச்சிகளை ஒளித்து வைத்துள்ளது என்பதைப் பற்றி..

எல்லோருமே பிறந்து விட்டோம்... மூச்சு, இதயம் அனிச்சையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன... பசி, தூக்கம், காமம், எந்த வித அழைப்புமின்றி அறிவிப்புமின்றி தோன்றி- அது தீர்ந்து - மறைந்து கொண்டிருக்கின்றன... அவைகளின் பக்க விளைவுகளை சமாளித்துக் கொண்டு நடமாடி...

ஒருநாள் இவை அனைத்தும் நின்றுவிடும். அவற்றின் நிழல்கள் நீடிக்கும்.. காமத்தின் நிழல் பிள்ளைகளாய். பசியின் நிழல் விட்டுச்சென்ற தொழிலாய் . அயர்வின் நிழல் செர்த்துச்சென்ற சுகமாய்.

ஆனால் நாம் ? உங்கள் தாத்தாவின் பெயர் தெரியுமா? அவர் தொழில்? அவரது தந்தையின் பெயர்? தொழில்? அவரது பூர்விகம்? தெவை இல்லை, இல்லையா? அல்லது அவசியம் இல்லை.

அவர் சமாதி மண்ணோடு மக்கி விட்டது. அவர் நினைவு மங்கி விட்டது. அவரது கடைசி நிழல்படமும் கரையான் இரைப்பையில். இனி அவர் இல்லை. உங்கள் மகனுக்கு அவர் இல்லை. உங்கள் பேரனுக்கு உங்கள் தகப்பன் இல்லை.

அவர்கள் வாழ்வின் நீளம் 3 தலைமுறை. நீங்களும் மறக்கப் படுவீர்கள். உங்கள் பதிவுகள் திறக்கப் படாமல் போகும். நம் பெயர்கள் உச்ச்சரிக்கபடுவது ஒரு நாள் முற்றும் முற்றும். உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகள் உங்களின் சுவடரியாமல் போவார்கள்.

ஏன்? பசி. தூக்கம். காமம். இவற்றின் எச்சங்களை மட்டும் விட்டுச் சென்றால், நம் வாழ்வின் நீளமும் இதுதான். குறைய வாய்ப்புண்டு. நிச்சயமாய்.

அறிவு, உணர்வு, பரிவு. இவற்றை விதைத்து பாருங்கள். நீளும். வாழ்ந்தோம், மறைந்தோம், கரைந்தோம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. மூழ்கி மூச்சு முட்டி , இறக்கப்போகிறோம், மறக்கப் போகிறார்கள் என்று அறிந்து மரணம் சேர்வதில் உடன்பாடில்லை.

நான் நினைக்கப் பட வேண்டியவன். அதை நோக்கி நடக்கப் பழக வேண்டியவன்.