Saturday, December 10, 2011

பயணப் பக்கங்கள்- மதுரை



சுத்தமாக அசாருதீன் 'நிக்காவை ' மறந்துவிட்டேன்... :-) காலை 10:30 மணிக்கு நியாபக உதயம். நல்ல வேலையாக விழா மாலை 5 மணிக்கு என்பதால் உயிர் வந்தது. பலமுறை வருந்தி அழைத்திருந்தான் நண்பன்.

இதுவரை எல்லா கல்யாணங்களுக்கும் நானும் அவனும் தவறாமல் ஆஜர் ஆகிக் கொண்டிருந்தோம், நேற்று அவன் திருமணத்தில் நான்.

சற்று கவலை வந்தது...அதைப்பற்றி பிறகு நினைக்கவில்லை.

SK வந்து இருந்தார். C.T.R, SK என் வாழ்வில் நான் மிக அதிகம் மதிக்கும் இரண்டு ஆசிரியர்கள்.

கலியாணம் கழித்து அப்படியே எதிரில் ரயிலடி போய் விட்டேன். மதுரைக்கு பயணம். தாத்தாவின் எழுபத்தி ஐந்தாம் அகவை தினம். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் வாயிலிலுள்ள வீரன்தான் அவரது குல தெய்வமாம் (மதம் டு மதம் transfer ஆவது போல, குல தெய்வம் டு குல தெய்வம் transfer ஆக ஏதேனும் வழி உண்டா? எங்க அப்பா வழி குல சாமி வைதீஸ்வரராம், சொல்லி கொள்ள அவ்வளவு கம்பீரமாக இல்லை.. ).

வழக்கம் போல் டிக்கெட் சொதப்பல்.. அம்மாவிற்கும், அக்காவிற்கும் RAC , எனக்கு அது கூட இல்லை...கடி.

TTR-யிடம் அப்பா பேசியதில், "ஏறச் சொல்லுங்கள், பார்த்துக்கொள்ளலாம்" என்றார். பொதுவாக இந்த வார்த்தைகளுக்கு, கொஞ்சம் மாமூலான அர்த்தம்தான்... கிடைத்துவிடும் என்ற அர்த்தத்தை சொன்னேன்.

ஏறிவிட்டோம். எனக்கு எதிரில் வெண் சட்டை, பையில் montblanc பட்டை, சந்தனம், Gold Frame கண்ணாடி, வலது கையில் ருத்ராட்ச காப்பு, இடது கையில் தங்க கடிகாரம், pant[s], shoe[s] சகிதம் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டிருந்தார் ஒரு நாற்பது வயது அருகிய மதுரை தொழில்பதி.

மேற்சொன்ன எல்லாவற்றையும் விட, அவர் புத்தகம் படித்துக் கொண்டிருந்ததில் அவர் பால் ஒரு ஈர்ப்பு. "ஆ !!, 5 ரூவான்னு பேசிப் பாரு... 'ஏலு'ன்னு முடிச்சிடலாம்... ! ஆங்...!! ஆல் ரெடி ஒரு பார்ட்டி நெருக்கி வெச்சிருக்கோம்... அப்புடியே பத்துக்கு... ஆ!", என்று மந்தை சந்தையாக உயிரை எடுக்காமல் புத்தகம் படிக்கும் ரியல் எஸ்டேட் 'பார்ட்டிகள்' மீது வரும் ஈர்ப்பு.

அவருக்கும் பர்ஸ்ட் கிளாஸ் கன்பார்ம் ஆக வில்லையாம். எ/சி இரண்டாம் வகுப்பில் பயணிக்க கவலை. TTR -யிடம் 13 முறை கேட்டு விட்டார் ,"சான்சே இல்லியா ??"

இந்த இரண்டாம் வகுப்பு (எ/சி ! :-p ) கவலையிலும் புத்தகத்தை ஆர்வமாக படித்ததைப் பார்த்து, நிச்சயம் என்ன புத்தகம் என்று பார்த்து விட ஆவல். அருகில் இருந்து கண்களை ஓட விட்டேன்.

மேற்சொன்ன ஈர்ப்பு 'lost baggage-யில்' சேர்ந்து விட்டது. :-( .

நடுவில் எங்கோ ஒரு பத்தி,

'......பஸ் என்பது, பயணிகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஏற்றிச் செல்லும் இயந்திர குதிரை...அல்லது கழுதை...அல்லது ஒட்டகம்...அல்லது ஏதோ ஒன்று(!?!) அத்தகைய...'

என்று செல்லும் 'சந்தியா ', 'லதா ', 'மயங்குகிறான் ஒரு சாது ', புத்தகங்களை படித்துக் கொண்டிருப்பவர் மீது ஈர்ப்புகள் நிலைப்பதில்லை.

அம்மாவுக்கும், அக்காவுக்கும் எங்களோடு பயணித்த வடக்கத்திய குடும்பத்தின் புண்ணியத்தில் இரு படுக்கைகள் கிடைத்தன. எனக்கு 4 கரேஜ் தள்ளி இரவு 12-க்கு ஒரு படுக்கை கிடைத்தது. 300 'ஒவாயில்'. பெரிய மனதுடன்.

மதுரை மாநகர்.