Thursday, January 23, 2014

எங்கே போகிறோம்?

வணக்கம்,
                       பதிவுகள் இட்டு கிட்டத் திட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது... இந்த ஒரு வருடத்தில் வாழ்கையில் நிறைய பாடம். அதெல்லாம் பிறகொரு நாள்.

சில பதிவுகளை காலம் தாழ்த்தாமல் இட்டுவிட வேண்டும். இல்லை என்றால் அதன் மதிப்பு மறைந்து விடும்.

facebook -கிலும்  , twitter -ரிலும் , ஏன் Watsapp-பிலும்  கூட மக்கள் வெறுப்பையே உமிழ்வதும், எதைக்  கண்டாலும் மதம்/இனம் /ஜாதி  என்னும் விஷயங்களோடு அதனை தொடர்புபடுத்தியே பார்ப்பதும், பரப்புவதும், வெறுப்பதும் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

மன்னார்குடி திருவிழாவில், 16-17 வயது விடலைகள் எல்லாம் கூட்டம் கூட்டமாக "பனை மரத்துல வவ்வாலா, *^%$-ருக்கே சவாலா?", என ஒரு ஜாதி கூட இல்லை, ஒரு ஜாதியின் இரு  உட்பிரிவின் பகைக்கு இறையாகிக்கொண்டிருந்ததை எப்பொழுதோ பதிந்ததாக நினைவு...

இனம் , ஜாதி , மதம் , எல்லாவற்றிற்கும் கொடுக்க வேண்டியதை விட மிக அதிகம் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். கவலையாக உள்ளது.

அதெல்லாம் போன தலைமுறை, இனி வரும் காலங்களில் எல்லாம் இல்லை எனச் சொல்கிறவர்களுக்கு, அப்படி மாறி விட நீங்களும், நானும் என்ன செய்து விட்டோம்?  ஆனால் அப்படி மாறிவிடாமல் இருக்க ஒரு பெரும் கூட்டமே தினம் தினம் பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது... மேலே உள்ள மன்னை திருவிழா காட்சி-சாட்சி.


டிசம்பர் 11 பாரதி பிறந்தநாள் அன்று facebook -இல் எனது சித்தப்பா ஒரு பதிவு இட்டிருந்தார்... ரஜினி பிறந்தநாள் வெளிச்சங்களிலும் , வெடிச் சத்தத்திலும் பாரதியின் சுட்டும் விழி சுடர் தூண்ட ஆள் இன்றி துவண்டு விட்டதை பற்றி.

அதற்கு ஒரு பின்னூட்டம் ' இவன் இந்து வெறியன் அல்லவா ? இவன் என்ன செய்துவிட்டான் நாட்டிற்கு ?' பதிந்தவர் இசுலாம் மதத்தை பின்பற்றுபவர். எனக்கு அழுவதா  ,எனது கணினியை உடைத்து எறிவதா என்று தெரியவில்லை... என்ன உலகம் இது?

காமராஜரை 'காமராஜ நாடார்' என்றும், கப்பலோட்டிய தமிழனுக்கு நிதி உதவி செய்தவர் ஒரு இசுலாமியர் என்றும், எழுத்தாளர் சுஜாதாவை 'அந்த பார்ப்பான் ' என்றும், எல்லாவற்றையுமே ஜாதி, மதம், இனம் என்று குமட்டும் அளவுக்கு புகட்டுவது ஏன்?

அவர்கள் அப்படி சொல்லிக் கொண்டார்களா ? நடந்து கொண்டார்களா? அப்படியே அவர்களுக்கு தத்தம் மதம்/ ஜாதி/ நம்பிக்கையின் மேல் பற்று  இருந்திருந்தாலும் அவர்கள் அதை மற்றவர் மேல் திணித்தார்களா?

இதற்கு நடுவில் இந்த ஒன்னரை அணா டி வி -க்களில் தோன்றும் மத தூதர்கள் ' ... எனது நண்பர், கிருஸ்துவின்  நாமத்தை எந்நேரமும்  ஜபிப்பவர்- இளைஞர், அவருக்கு ஒருவர் ஒருமுறை ஒரு கோவில் பிரசாதத்தை கொடுத்தார், அதனை என் நண்பர் அவர் கண் முன்னாலேயே கீழே எரிந்து விட்டு, இது பிசாசிற்கு படைக்கப் பட்டது என்று கூறி மறுத்து விட்டார்... என் நண்பர்களே, நீங்களும் இவ்வாறு  செய்யுங்கள்... அந்த பிசாசு தெய்வங்களுக்கு படைக்கப்பட்ட பொருட்கள் தரப்பட்டால், அவர்கள் கண் முன்னாலேயே தூக்கி வீசுங்கள்....' என்று ஒன்றாய் இருக்கும் மனிதர்களை துண்டாய் போட தூது வந்து கொண்டு இருக்கிறார்கள்...

சக மனிதன் உன் நம்பிக்கைக்கு வேறு பட்டவனாய் இருந்தால் , அவனுக்கு குறைந்த பட்ச மரியாதை கூட கொடுக்காதே என்பது போன்ற பேச்சுக்கள்....

எங்கே போகிறோம்?