Saturday, August 05, 2017

தமிழ் அடையாளம்

தமிழ் அடையாளங்கள்: (ஒரு நண்பியின் தேவைக்காக இணையத்தில் இருந்து எடுத்து, கொஞ்சம் சொந்தக் கருத்துக்களையும்  புகுத்தி இட்ட கட்டுரை. மூலம் குறித்து வைக்காததால் இங்கே கொடுக்க முடியில்லை. அந்தந்த ஆசிரியர்களுக்கு நன்றி) 

அடையாளங்கள்:

அடையாளம் என்பது மற்றெல்லாவற்றில் இருந்தும் ஒன்றினை பிரித்துக் காட்டுவதாய் இருக்கலாம் அல்லது ஒரே போல் இருப்பவற்றை வேறு படுத்திக் காட்டுவதாகவும் இருக்கலாம்.

எல்லோரும் பல அடையாளங்களை சுமந்து கொண்டே வாழ்கிறோம், இடங்களுக்கும், காலங்களுக்கும், ஏவலுக்கும், பொருளுக்கும் ஏற்ப நம் பல அடையாளங்களில் சிலவற்றை பயன் படுத்துகிறோம். சிலவற்றால் அறியப்படுகிறோம்.


தமிழ்நாட்டில் - சென்னைவாசி , இந்தியாவில்- தமிழன், உலகில் -இந்தியன், 'இன்னாரின் மகள்',  'இன்னாரின் நண்பர்' , 'இன்ன வேலை செய்பவர்' ,   கூறிக்கொள்பவர் யார்? அவரின் அடையாளங்கள் என்ன?

தமிழ்:

தமிழ் என்பது மொழி மட்டுமல்ல. தமிழ் வாழ்க்கை , பக்தி, வழிபாடு, கல்வி, பண்பாடு , என எல்லாவற்றிலும் கலந்தே வரும் மொழி தாண்டிய அடையாளம்.

இதனால்தான் தமிழகத்தில்  பிறப்பவர், இருப்பவர், தமிழ் பேசுபவர், புலம் பெயர்ந்தவர், தமிழறியாத தமிழர், இவர்களில் யார் தமிழர்? மேலும் முக்கியமாக இவர்களை இணைக்கும் அடையாளம் எது?, எனும் கேள்விகள் இன்றைய காலகட்டத்தில் முக்கியம் பெறுகிறது

தமிழர்களின் உயிரோடு ஒன்றிப் போன சாதியப் பற்றும் வாழ்வோடு ஒன்றிப் போன சாதிய அடையாளங்களும் இதில் வேரூன்றி பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.

உலகில் எந்த மூலையில் இருந்தாலும், தமிழர் தம்மை, தமக்குள்ள ஜாதியைக் கொண்டே அடையாளப் படுத்திக் கொள்கின்றனர்.

உண்மையில் உலக அரங்கில் தமிழின் முகவரியாக இலங்கையே இருக்கிறது. தமிழின் அடையாளமாக இலங்கைத் தமிழரே இருக்கின்றனர். இந்தியாவில் தமிழர் இருக்கின்றனர் என்பதே பல அயலவர்க்கு ஆச்சர்ய செய்தியாக உள்ளது.

புலம் பெயர் தேசங்களில்:

புலம் பெயர் தேசங்களில் வாழும் இளைய தலைமுறையினர் தாய்நிலத்தின் எண்ணங்களோடும் உணர்வோடும் வாழ்கின்றார்களா? அல்லது புலச் சமூகத்தோடு ஒன்றி வாழ்கின்றார்களா? என்பது பலர் மனங்களில் எழுகின்ற கேள்வியாக இருக்கின்றது. அத்தோடு "இங்கேயே பிறந்து வளரும் குழந்தைகளின் எதிர்காலம் இங்கேதான் நிச்சயிக்கப்படுகின்றது. ஆகவே அவர்களுக்கு தாயகம் பற்றிய சிந்தனை அவசியமற்றது" என்ற கருத்துடைய சிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆகவே இப்படியான கேள்விகளுக்கு விடை காணும் நோக்குடன் தமிழ் அடையாளத்தின் தன்மைகள் அலசப்படவேண்டும். 


இளைய சந்ததியினர் மத்தியில் தமிழ் அடையாளம பற்றிய விரிவானதும் தெளிவானதுமான பார்வையை உருவாக்க வேண்டிய தேவையும் இன்றியமையாததாகின்றது.ஓரு இனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது அந்த இனத்தின் மொழியும் அம்மொழி சார்ந்த பண்பாட்டு விழுமியங்களுமே. உலகத்தின் எந்த மூலையில் வாழ நேரும் போதும் இனத்தின் தனித்துவம் பேணப்படவேண்டும். நாம் வாழும் நாடுகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எமது வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய தேவை எமக்குண்டு. அதுவே அறிவுக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் பொருத்தமான செயலும் ஆகும். வாழுகின்ற சமூகம் பற்றிய தெளிவான அறிவை உள்வாங்குவதன் மூலமே எம்மை வளர்த்துக்கொள்ள முடியும். ஆனாலும் எமது இனத்துவ அடையாளங்களை நீங்கி "எப்படியும் வாழலாம்" என்ற முடிவுக்கு வருவோமாயின், நாகரிகமற்ற பண்பாடற்ற மனிதர்களாக, வாழ்வின் அர்த்தங்களை இழந்தவர்களாக வாழ நேரிடும். 


தமிழர் என்று சொல்வதையும் தமிழ்ப் பெயர் தாங்கி நிற்பதையும் பெருமையாகக் கொள்ளுகின்ற மனநிலை எல்லாத்தமிழ் இளைஞர்கள் நெஞ்சங்களிலும் உருவாக வேண்டும். எமது தாய் தேசத்தில் தமிழர்கள் சொல்லில் அடங்காத துன்பங்ளுக்கும் அவலங்களுக்கும் முகம்கொடுத்தபடி வாழ்கின்றார்கள். போர்த்தீயில் தேசம் எரிந்த போதும் விடியல் வருமென்ற நம்பிக்கையோடு முன்னேறும் எமது உறவுகளின் உறுதி நிறைந்த வாழ்வு பற்றி அறிய வேண்டும். அவர்களின் அன்றாட வாழ்வின் வலிகளை இங்கு வாழும் இளைய சந்ததி உணர்ந்து கொள்ளவேண்டும். இன்று புலம்பெயர் மண்ணில் வாழும் முதல் தலைமுறையினர் தமிழகத்திலோ, தமிழீழத்திலோ பிறந்தவர்கள். அவர்களுடைய வேர் தமிழ் மண்ணிலிருந்து படர்ந்தது என்பதால் உள்ளத்தில் கலந்த இன உணர்வும் மொழி உணர்வும் அவர்களின் காலம் வரை நிலைத்திருக்கும் என்ற உத்தரவாதமுண்டு. 

ஆனால் அடுத்த தலைமுறையை வழிநடத்தும் பொறுப்பை அங்கு பிறந்து வளர்பவர்களே கையேற்கப் போகின்றார்கள். அங்கே தமிழ் அடையாளம் எவ்வாறு மாறு படப் போகிறது?

எடுத்துக்காட்டாக, பிஜி , ரீயூனியன் தீவுகளில் வாழும் தமிழர்கள் தமிழ் மொழியை அடியோடு மறந்தாலும், பிற தமிழ் வழிபாட்டு, திருவழா முறைகளை  இன்றளவும் பின் பற்றி வருகின்றனர். 

அடையாளத்தின் எல்லை என்ன? அடையாளத்தின் வரையறை என்ன?


Saturday, May 13, 2017

மன்னார்குடி ஊஞ்சல்

இருள் எல்லாவற்றிலும் ஒரு மாயையை தந்து சேர்த்து விடுகிறது... மன்னார்குடி பயணம்  

Tuesday, March 28, 2017

கடவுள்

இயற்கையின் /இறையின் படைப்பில் பசி, காமம்(புணர்தல்/சந்ததி செய்தல்), தூக்கம், கழிவேற்றல் போன்ற உணர்வுகள் கடைசி மனிதன்-மனிதிவரை , ஏன் புழு-பூச்சி-கிருமி வரை பொதுவானதாக இருக்கின்றன,
ஆனால் உலகெங்கும் வழிபடப்படும் கடவுள்களும், அவர்களின் தொழுகை, பூஜை, நோன்பு, ஜெபம், என வழிபடும் வழிகளும், அவரின் மொழிகளும், எதுவுமே பொதுவானதாக இல்லை, எப்படி?
இந்த எல்லா மதங்களும் கடவுள்களும் சிறு சிறு பூகோள வட்டங்களுக்குள் பிறந்து பின்பே பரப்பபட்டு இருக்கின்றன. ஏன்?

பிறந்த கன்றிற்கு, தாயின் மடி யாரும் காட்டாமலே தெரியும் அந்த உணர்வைப் போல, ஒவ்வொரு உயிரும் தானாகவே படைத்தவனை உணர வேண்டாமா? தாமாக யாரும் உணராத கடவுள் எப்படிக் கடவுளாக இருக்க முடியும் ? உறக்கம் சுழற்றும் பொழுது கண்ணை மூட யாரும் கற்றுத்தர வேண்டி உள்ளதா?

பின், மிக மிக இயற்கையான இறைவனையும், அவரை வழிபடும் அவசியத்தையும், அவரின் வழிகளையும், ஏன் ஒரு குரு, ஒரு தூதர், ஒரு ஞானி, ஒரு பூசாரி நமக்கு கற்பிக்க வேண்டி உள்ளது?

இல்லை, படைத்தவன் அவ்வாறு செய்ய விரும்பவில்லை, அவன், நாம் அவனை நம் அறிவால் உணர வேண்டும் என்றே இவ்வாறு படைத்தான் என்று கூறினால்.....

அவரவர் உணர்ந்து கொள்ள விடாமல், போதித்து, போதித்து வழி நடத்துவது இறைவன் மறைக்கு எதிர்மறையானதல்லவா?