யோசிச்சு யோசிச்சு பாக்குறேன்.. எப்புடி? கணக்குல 10 , சயின்ஸ்ல 20, வரலாறு, பூகோளம் எல்லாம் அரையோ, காலோ... ஆனா தமிழுல 80 -90.... எப்புடி? எங்க நெஜமாவே தமிழ் பிடிக்க ஆரம்பிச்சிது?
ராதா சித்தி .. சிறுவர் மலர்... அங்கதான் ஆரம்பிச்சிருக்கணும்... ஆமா.. அங்க தான் ஆரம்பிச்சிச்சு... கதை படிச்சு படிச்சுதான் எனக்கும் அமுதனுக்கும் சாப்பாடு ஊட்டனும்.. ராமாயணம், மகாபாரதம், புராணம், சி. ஐ . டீ.... இப்படி விதம் விதமா சொல்லணும்...
ஆனா நல்லா நியாபகம் இருக்கு, ராதா சித்திக்கு சில நேரம் கதை சொல்லிச் சொல்லி தொண்டை வறண்டிரும்... அப்பறமா சொல்லறேன் குட்டி, அத்தைக்கு முடியலை.... நீங்களே படிங்க பாப்போம்ன்னு தூங்கிடுவாங்க... அப்போ நாங்களாவே சிறுவர் மலர் எடுத்து படக்கதை பார்க்க ஆரம்பிச்சிடுவோம்... அப்பறம் மெல்ல மெல்ல சிறுகதை... தொடர்கதை....
அப்பறம்.. மன்னார்குடி.. அங்க போனா அம்மா, மாமா சின்ன வயசுல அவங்க படிச்ச படக்கதைகள்.. 'ராணிமுத்து ' ;-D ... மாயாவி, இரும்புக்கை மாயாவி, இன்னும் நெறைய...
ஜூனியர் விகடன்ல வார வாரம் எதாவது ஒரு பெண் 'போலிஸ் ஸ்டேஷன்ல கற்பழிக்கப்ப் பட்ட', அல்லது யாராச்சும் ஒரு நடிகை, அல்லது , 'அழகியோட ' அரைகுறை டிரெஸ் படம் , இதுமாதிரிதான் அட்டையில போடுவாங்க... விலாவாரியா கிளுகிளுப்பு கொறையாம எழுதவும் செஞ்சிருப்பாங்க....
அதானால அதையும் படிக்க ஆரம்பிச்சேன்... திருட்டுத்தனமா...
"போற வழி தப்பா இருந்தாலும், சேருற எடம் கோவிலா இருக்கணும் " நு ஜென்டில்மேன் படத்துல நம்பியார் சொல்ற மாதிரி, இப்படி உருப்புடாம படிச்சிருந்தாலும், அதுல தமிழ் நல்லா வந்திருச்சி...
(ஆனா இப்புடி கண்ட கண்டதை படிச்சதுனாலதான் மத்த எதுலயும் தேறலைன்னு நீங்க நேனைக்கறதும் கேக்குது, அதுக்கு அப்பறம் வருவோம்...)
அப்பறம் நான் படிக்க ஆரம்பிச்சது வைரமுத்து .... மனுஷன் அப்போலாம் என்னைய அடிச்சு தொவைச்சு அழ வெப்பாரு... இந்த டயத்துல தான் நான் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் எழுதவும் ஆரம்பிச்சேன்...
இதுக்கெல்லாம் மின்னாடியே, அதாவது ரெண்டாம் வகுப்பு, மூணாம் வகுப்பில இருந்தே , தமிழ் மேல இன்னும் ஆசை வர காரணமா அமைஞ்சது - 'தமிழ் டிராமா...'
நாம என்னமோ வேல்கொம்பு புடிச்சிகிட்டு நாடகம்பூராம் ஓரமாதான் நிக்கப்போரோம்னாலும்... ஒருவரி கூட நம்பளை நம்பி குடுத்ததே இல்லனாலும்,
எல்லார் வசனத்தையும் மனப்பாடம் பண்ணி வீட்ல வந்து அம்மா முன்னாடி 15 பேரை மோனோ ஆக்டிங் செஞ்சு காட்டி அழ வெப்போம்......
பின்னாடி கொஞ்சம் முன்னேற்றம்.. நாலு காவல்காரன்ல முன்னால நாமதான்.. "ஒளி, நீ முன்னாடி நில்லு"ம்பாங்க தமிழ் அம்மா... மூஞ்சி தெரியும் போட்டோ எடுத்தா ... ஒரே பெருமை...
ஒரே ஒருதடவை தப்பி தவறி நாலு வரி வசனம் வந்துடிச்சு... ஆசை ஆசையா அம்மா கிட்ட வந்து சொல்லிட்டேன்..
கதையில பொய் சாட்சி சொல்றவன்... உடனே எங்க ஆத்தா , அப்பா எல்லாரும் பொங்கிட்டாங்க.... "பொய் சாட்சி சொல்றமாதிரி, பொய் சொல்ற மாதிரி எல்லாம் நடிக்க கூட கூடாது..." ஆச்சா ஊச்சான்னு ஒரே அட்வைசு.... கடைசில நடிக்க விட்டாங்க....
வெவரம் தெரிஞ்ச அப்பறம் நெறைய தடவ நெறைய கேள்விகள் மனசுக்குள்ள வந்திருக்கு..அவங்க கிட்ட எல்லாம் கேக்கனும்னு .... சரி ...அதை விடுங்க...
இங்கிலீஷ் நாடகம், டான்சு, எதுக்கு யார் கூப்ட்டாலும் போறது இல்ல... 'நாங்க தமிழ் டிராமா..'
அப்பறமா கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து ஹீரோ ஆனோம்... ஆனா பாருங்க என் கெரகம்... அடுத்த நாடகத்துல இருந்தே நடிக்க விடல வீட்ல... ("மொதல்ல படிச்சி கிழி, அப்பறம் போய் கூத்தாடு")
அப்பறம் பத்தாம் வகுப்பு லீவுல அம்மா அறிமுகம் செஞ்சு வேச்சவருதான் என்னை அடுத்த படிக்கு அழைச்சிட்டு போனாரு... அவர் பேர் சுஜாதா... கணேஷு, வசந்துன்னு ரெண்டு பேரை என் வாழ்க்கையில கொண்டு வந்தாரு.....
"பாஸ், குட்டிங்க எல்லாம் நம்ம கூடத்தான் ஜெர்மனி வருதுங்க... "
"என்னடா பாஷை இது, குட்டிங்க அது இதுன்னு..."
"அப்பறம் எப்புடி பாஸ் சொல்றது? 'கன்னிகைகள்'-ன்னு சொல்லலாமா? , ஆனா அது நமக்கு சரியா தெரியாதே பாஸ்....? கேட்டு வரட்டுமா ?"
வயிறு புன்னாயிருச்சிபா இந்த வசந்த் பையனோட... லீவு பூரா அவங்களோடதான்...
அப்பறம் புடிச்சது, கெடைச்சது, கெடைக்காதது, கற்றது, பெற்றது, கவிதை, பிளாக்குன்னு... தமிழ் என்னோட வந்துகிட்டு இருக்கு... ஆனாலும் இன்னும் சந்திப் பிழை இல்லாம எழுத தெரியாது... இலக்கணத்துல 80 பர்சண்டேஜ் மறந்திட்டேன்...
"சலசல சலசல ,ரெட்டைப் பிறவி, தகதக தகதக ரெட்டைக் கிளவி, உண்டல்லோ...தமிழில் உண்டல்லோன்னு " ஜீன்ஸ் பட பாட்டை வெச்சி திலகவதி மிஸ் ரெட்டைகிளவி எடுத்தது,
"ராமாயணத்தில் அங்கதன் ராவணனிடம் தூது போய், மலைமாதிரி இருந்த தோள்கள் குலுங்க, தன கரங்கள் இரண்டும் செவந்து போற அளவுக்கு கைய தட்டி 'நக்கினான்' அப்படிங்கறதை படிச்ச மறு நிமிஷமே, 'நக்கல்'ங்குற வார்த்தை எங்க இருந்து வந்துச்சுன்னு புரிஞ்சது நியாபகம் இருக்கு ....
நெல்லுக்கும் யானைக்கும் சேத்து பாடுன சிலேடையோட நியாபகம் இருக்கு...
"எக்கலிங்கம் போனால் என்ன, ...மதுரை சொக்கலிங்கம் உண்டே துணைன்னு" குருட்டுப் புலவர், இருந்த ஒரு டிரெஸ்ஸயும் தொலச்சப்பக் கூட நக்கலா பாடுன பாட்டு நியாபகம் இருக்கு...
இப்படி கொஞ்சம் கொஞ்சம் நியாபகம் இருக்கு.... புறநானூறு அறிமுகம்- சுஜாதா, வாங்கி இருக்கேன்.. பாக்கலாம்....
தமிழ் ரொம்ப பிடிக்குமுங்க.. ஆனா சூரப் புலி எல்லாம் கெடையாது... எனக்கு வெக்கமாத்தான் இருக்கு... என்ன பண்றது? தமிழ் பிடிக்குமே...
தப்பு பண்ணாம தமிழ் கத்துக்க முடியாதுங்க... அதனால வெக்கப்படாம கத்துக்கலாம்.... கேக்க மறந்துட்டேன்....உங்களுக்கு தமிழ் பிடிக்குமா? வாங்களேன், தப்பு தப்பா பேசி எழுதியாச்சும் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கலாம்... தப்பில்ல .... :-)