Thursday, April 22, 2010

முதல் பரிசுக் கவிதை...

அதிகாலை எழுந்து விட்டதால் என்ன செய்வது என்று அறியாமல், தூங்கவும் மனம் இல்லாமல் என் பழைய கவிதை நோட்டுகள் / துண்டுக் காகிதங்கள் ஆகியவற்றை பிரித்து மீண்டும் பலவருடங்களுக்கு முன்னாள் கவிதை எழுதும் ஆர்வக்கோளாரில் கொண்டு கண்டதையெல்லாம் எழுதிச் சேர்த்து வைத்திருந்த கிறுக்கல்களை ஆராய்ந்தேன்... இப்படி அடிக்கடி செய்வது ஒரு அழகான உணர்வு ...

அதில் சில கவிதைகளை வலைப்பூவில் இடவேண்டும் என்று தோன்றிற்று .. சில அவைகளின் நயத்திற்காக, பல நகைப்புகாக.. நிறைய கவிதைகள் சில்லியாக இருக்கின்றன.. அவற்றின் கதைகளைக் கூறி, அவற்றைப் பற்றி இப்பொழுது தோன்றும் கருத்துக்களை இட்டு வலைப்பூவில் போட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது..

ஒருவேளை, வலைப்பூ என்பதே எல்லா இடத்திலும் கவிதைகள் பிரசுரம் ஆகாமல் திருப்பி அனுப்பப்பட்ட ஒரு கவிஞனின் கண்டுபிடிப்பாக இருக்குமோ என்று தோன்றுகிறது? நம் படைப்புகளை எவனும் வெளியிட வேண்டாம்.. நாமே வெளியிட்டுக்கொள்ளலாம்.. நிராகரிப்பே கிடையாது... யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

நான் முதல் முதலாக (முதலும் கடைசியுமாக) பரிசு பெற்றது இந்தக் கவிதைக்குதான்.. பதினொன்றாம் வகுப்பில், பள்ளி ஆண்டு விழா கவிதைப் போட்டிக்காக எழுதிய கவிதை இது.. மூன்று தலைப்புகள் கொடுத்திருந்தார்கள்.. ஒன்று அப்பொழுது குஜராத்தில் நிகழ்ந்திருந்த கொடிய இயற்கை பேரழிவு - பூகம்பம் பற்றியது, மற்றொன்று அமரகவி பாரதி பற்றி, மூன்றாம் தலைப்பு நினைவில் இல்லை.

பாரதியை பற்றி எழுதுவதுதான் என் முதல் எண்ணம்.. பிறகு எவ்வளவு எழுதினாலும் ஏற்கனவே எங்கோ யாரோ எழுதியது போலவே எனக்கு ஓர் உணர்வு.. மிகவும் கிளிஷே வாகவே கருத்துக்கள் தோன்றிக்கொண்டிருந்தன... மீசைவைத்தவன், முண்டாசுக் கவிஞன்.. என்றெல்லாம்... பிறகு இந்த தலைப்பை தேர்ந்து எடுத்தேன்...

கடுமையான போட்டி என்று கூற இயலாது. அனால், ஆண்டுவிழாவிற்கு தமிழ் வாத்தியாரும், சமஸ்க்ரித வாத்தியாரும் சமர்பித்த நாடகங்கள் நிராகரிக்கப்பட்டு, நான் எழுதிய நாடகம் தேர்வு செய்யப்பட்ட நேரம் அது. இருவரும் என் மீது கொஞ்சம் அதிகமாகவே துவேஷத்தில் இருந்தனர்.

தமிழாசிரியர் உயர்திரு . புகழேந்தி எனப்படுகின்ற சீனிவாசன் எனப்படுகின்ற திரு . அஸ்வின் அப்பா என்னை தேர்ந்தெடுக்கக்கூடாது என்று கொஞ்சம் ரொம்பவே கடுப்பில் இருந்தார்; வெங்கடகிருஷ்ணனுக்கு பரிசு வாங்கித்தர வேண்டும், என்பதில் சமஸ்க்ரித ஆசான் மிகக் குறியாகி, அவரே கவிதை வரிகளையும் எழுதி தந்திருந்தார். நல்லவேளை!

அதிர்ஷ்டவசமாக இவர்கள் இருவருமே தேர்வு செய்யும் நடுவர்களாக இல்லை, திருமதி . கர்னாம்பாள் என்றழைக்கப்பட்ட, கிருபாகாந்த் அம்மாவாகிய, எங்கள் வேதியல் ஆசிரியை வெற்றிக் கவிதையை தேர்வு செய்தார்.மறக்காமல், கவிதையின் கடைசி வரிக்காகத்தான் இந்த பரிசு என்பதையும், இந்த ஆர்வத்தை படிப்பிலும் காட்டினால் உருப்படுவேன் என்பதையும் கூறி வாழ்த்தினார்.

இன்னொரு அழகான கொயின்சிடன்ஸ் , ஆண்டுவிழா நாடகத்தில் பாரதி வேடம் ஏற்றதால், கவிதைப் போட்டியில் பரிசு பெற என் பெயரை அழைத்ததும் மேடைக்கு பாரதி வேடத்திலேயே சென்றதைக் கண்டு கூட்டம் சிரிப்பும் ஆரவாரமும் கொண்டது... என் முதல் பரிசுக் கவிதை, முதல் பரிசையே பெற்றது....

இப்பொழுது படித்து பார்க்கையில் எனக்கே ரொம்ப 'காமெடி ' யாக இருக்கிறது.. கிட்டத்திட்ட சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதை... இன்று இதைப் படிக்கையில் சிரிப்புக் கவிதையாக இருக்கிறது... எனிவே... படியுங்கோள் ...


இதயத்தில் பூகம்பம்...
(தலைப்பு?...ஹ்ம்ம்.. )

பூமித்தாயே !,

உன் வாளின் கூர்மை சோதிக்க,
பூக்கள்தானா கிடைத்தன?
(ரொம்ப வைரமுத்து படித்து, கேட்டு உணர்ச்சிவசப்பட்டிருந்த காலம் அது... :-) )

உன் கனலின் வெப்பம் சோதிக்க,
பனித்துளிகள்தானா கிடைத்தன?

உன் பிள்ளைகள் மீது உனக்கே
ஏன் இந்த கோபம் ?

இரு,... இரு,...

(இது எதுக்குன்னு எனக்கும் தெரியலை..)

உன் கோபத்தின் எழுச்சியால்
ஏற்பட்ட பிளவா இது?

இல்லை, நீ குலுங்கி அழுததனால்
ஏற்பட்ட பிளவிதுவோ?
(ஐயோ... முடியலை...கவிஞர் பொங்குராராம்.)

நீ தலை தட்டி கண்டிக்க
ஆயிரம் வழிகள் இருக்கிறதே;

நீ வருத்தத்தை வெளிப்படுத்த
ஆயிரம் முறைகள் இருக்கிறதே;
(அண்ணாமலை படத்து டயலாக் தானே இது?)

அதையெல்லாம் விடுத்து
ஏன் இந்த அழிவு வழி?

உன் வருத்தத்தை வெளிப்படுத்த,
அளித்தாயோ பிரிவு வலி?

(வழி, வலி ...அடடடடா....)

போதும் தாயே !,
நிறுத்திவிடு உன் தாண்டவத்தை இனியாவது!,
உன் கோபம் எனும் முகமூடி வினையானது..

எச்சரிக்கிறேன் நிறுத்திவிடு பூமிப்பாவை,
இல்லை என் கவிதைத் தீயில் எரிந்தே போவாய்... !
(ஹ்ம்ம்.. பூமியை எரிச்சிட்டு தலைவர் வேற எங்க போவாராம்?)






பி. கு. அஸ்வின் அப்பா, கிருபாகாந்த் அம்மா, என்றெல்லாம் ஆசிரியர்களுக்குபட்டப் பெயர் வைத்திருப்பதற்கு மிக மிக சுவாரஸ்யமான காரணங்கள்இருக்கின்றன... அவை பற்றி வேறோருசமயம் வாய்ப்பு அமைகையில் கூறுகிறேன்..