Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Friday, January 09, 2015

விடு

யாக்கை உதறிவிட்டு
யானும் வான் பறந்து
பறவைப் பார்வையிலே
வாழ்வைப் பார்க்கயிலே

கவலைகள் அரிப்பதில்லை
கடவுள்கள் தடுப்பதில்லை
பொய்த்துணைத் தேடவில்லை 
மனப்-பேய்களும் ஆடவில்லை..

கொண்டது இழப்பதுவோ
கண்டது பிடிப்பதுவோ
நோய்ப் புண் துடிப்பதுவோ
எதுவும் மிடிமையில்ல..


வயிறும் நாக்குமில்லை
வன்மம் தொடர்வதில்லை
கதிர்-நிழல் கடவுமில்லை  
நாளைசெய் கடனுமில்லை..


ஒற்றை அச்சம் மட்டும்
இன்னும் மிச்சம் இருக்கிறதே...



இக்-கவிதை  முடிக்கையிலே 
என் வாழ்க்கை  திரும்பிடுமே....

:-(


Friday, January 11, 2013

(நானும்) நின்னைச் சரணடைந்தேன்....

காலை எழுந்தவுடன் FB ,
பின்பு கனிவு கொடுக்கும் ஒரு காபி,
வேலை முழுவதிலும் OB ,
வீட்டுக்கு வந்ததும் போடுவான் டிவி ,
இப்படி வாழ்ந்திடும் பாவி,
இவனை நீதான் காக்கணும் தேவி!!

Tuesday, January 01, 2013

புத்தாண்டு வாழ்த்துக்கள்!- 2013

வெயில் கோடையில் குளிர் தேடிடும்,
குளிர் வாடையில் வெயில் ஏங்கிடும்,
'மனதர்' ஆகினோம்..

மனப் பாதையில் தினம் ஓடினோம்,
அதன் ஆசையில் நூலாடினோம்,
பாதை தேடினோம்.

விரதமும் இட்டு வாடினோம்,
கடவுளும் சற்று சாடினோம்,
ஏது குழம்பினோம்.

தினம் தேதிகள் அவை மாறிடும்,
ஆண்டுகள் உருண்டோடிடும்,
வயது கூடிடும்.

சக மனிதனின் ரணம் ஆற்றி நாம்
சிறு கடுகவன் நலம் ஏற்றி நாம்
நாட்கள் நிரப்புவோம்

வெறும் தேதிகள் என்றாகிடா,
கண் திறக்குமுன் ஓடிடா

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


புத்தாண்டு வாழ்த்துக்கள் !





Sunday, October 07, 2012

தூரம்...

அன்புள்ள வைபர் ராட்சஷி,

உன்னைத் தேடி ஒரு கணத்தில்,
வின்னைத்தாண்டும் என் மனது,
உடலை தாங்கி-யும் சென்றால்
என்னவென்று ஒரு கனவு...

விழிகள் மூடி அரை நொடியில்,
உனைத் தந்து சேர்க்கும் என் கனவு,
விழிப்பை தாண்டி-யும் நிஜமாய்
நீள துடிக்குதென் மனது...

Friday, October 05, 2012

தொடங்கிவிட்டேன் பயணத்தை.





துருவத்தில் மீனாக
மனவெளியில் உருவித்தாய்

உனைக் காணும் பயணத்தில்
அடைவேனோ உடைவேனோ..

அடைந்தாலும் தொடுவேனோ,
கண்தீயால் சுடுவாயோ ?

உடைந்தாலும் அழுவேனோ
உன் மார்பை தருவாயோ?

விடைகான ஒரு வழிதான்...
...
தொடங்கிவிட்டேன் பயணத்தை...

Monday, September 03, 2012

உரிமை கொள்ளும் காலம் எப்போ?






கடலாடும் நிலவே நீ,
என் கனவாடும் பெண் போல்தான்...

கடல் நீங்கி எங்கேயோ உலவி தொய்யும் வேளையிலும்,
நிழலாலே அலையாடி கலவி செய்யும் காதலென்ன?

குரலாலும் , நினைவாலும், எத்துனை நாள் காதல் செய்ய?
உறவாலும், விரலாலும் உரிமை கொள்ளும் காலம் எப்போ?


--

Sunday, February 20, 2011

செல்லமே...

அதிகாலை வாய்க் கசப்பில்
விழிக்கிறேன்...

எழ வேண்டிய நேரம்தான்
என்றாலும்,

வாயின் கசப்பு எழுப்பியதை
எண்ணி,

இன்றைய பொழுது எப்படியோ
என்று

தண்ணீர் தேடி கொப்பளித்து
விட்டு...

பின்னேழுந்து, கிளம்பி, கீழே கீழிறங்கினால்
பிறந்தநாள் என்று

வாயில் இனிப்பை திணிக்கிறாய் நீ...

Saturday, October 23, 2010

அதிகாலைத் தேநீர் திட்டம்...

கிழக்கு கடற்கரையில்,
உதிக்கும் சூரியனோடு ஒரு தேநீர்,

வெள்ளிக் கடல்
கால் வருட, கையோடு கை -

என்றெல்லாம் பெரும் திட்டத்தோடு
தொடங்குகிறது நமது நாளைய பொழுது,

மடக்கி, நீட்டி, பிரண்டு ,
ஆடை தேடி, காலணி கிடைக்காமல்...

விடிந்துவிட்டதே! போவதா,
தேவையா, என்று நினைத்து முடிக்குமுன்,

அழைக்கிறது அலைபேசி , உறக்கம்
கலையா உன் குரல் தயக்கம் கலைக்கிறது,

என் பால்கனியில், ஒரு காபியோடும்,
உன் படுக்கையில், சிறு போர்வைக்குள்ளும்,

வழக்கம்போல், இன்றும்
சுபமாக முடிகிறது நம் பெரும் திட்டம்...

Monday, June 14, 2010

குட்டிக் கவிதைகள்

என் முத்தம் மட்டும்
முடிகையில்தான்
இதழ்கள் இணைகின்றன...

--

வானம், கையெட்டும் தூரம்தான்.
என் ஜன்னல்
கம்பிகள்தான் தடுக்கின்றன..

--

ஓடி விளையாடு பாப்பா-
என்று மாலை முழுதும்
மனப்பாடம் செய்தான்.

--

புத்தத்தில் கூட
ஆசைக்கு இடம் உண்டு.
ஆசைகள் துறக்க.

--

பி. கு. வழக்கம் போல் எப்பொழுதோ எங்கெங்கோ தோன்ற தோன்ற கிறுக்கிவைத்திருந்த கவிதைகள். என் பொன் குஞ்சுகள்.

Saturday, May 29, 2010

பொல்லாது...

--


அலைகள் போல நில்லாது
அலையும் உள்ளம் பொல்லாது...

விழியை தீண்டி நில்லாது
விலகும் துயிலும் பொல்லாது...

சொல்லச் சொல்லி சொல்லாது
ஏய்க்கும் வார்த்தை பொல்லாது...

உனைக் காணும் நொடியில் நில்லாது
தொடரும் காலம் பொல்லாது ...

உனைக் காணாக் கணத்தில் நில்லாது
ஓடும் உயிரும் பொல்லாது...

நீ இல்லா உலகம் இல்லாது
செய்த இக்காதல் பொல்லாது...





பி. கு. ஒரு பின்னிரவில், கடற்கரையில் அழுது , சிரித்து, ஐஸ் கிரீம் முதல்சிகரட் வரை பகிர்ந்து காலத்தை அந்த நொடிக்குள் தொலைத்து இருந்த காதலர்களையும், ஓயாமல் எனை அழைத்து செய்தி சொல்லிகொண்டிருந்த கடல்அலைகளையும் விட்டுப் பிரிந்து கிளம்புகையில் தோன்றிய சில வரிகள்...

Thursday, April 22, 2010

முதல் பரிசுக் கவிதை...

அதிகாலை எழுந்து விட்டதால் என்ன செய்வது என்று அறியாமல், தூங்கவும் மனம் இல்லாமல் என் பழைய கவிதை நோட்டுகள் / துண்டுக் காகிதங்கள் ஆகியவற்றை பிரித்து மீண்டும் பலவருடங்களுக்கு முன்னாள் கவிதை எழுதும் ஆர்வக்கோளாரில் கொண்டு கண்டதையெல்லாம் எழுதிச் சேர்த்து வைத்திருந்த கிறுக்கல்களை ஆராய்ந்தேன்... இப்படி அடிக்கடி செய்வது ஒரு அழகான உணர்வு ...

அதில் சில கவிதைகளை வலைப்பூவில் இடவேண்டும் என்று தோன்றிற்று .. சில அவைகளின் நயத்திற்காக, பல நகைப்புகாக.. நிறைய கவிதைகள் சில்லியாக இருக்கின்றன.. அவற்றின் கதைகளைக் கூறி, அவற்றைப் பற்றி இப்பொழுது தோன்றும் கருத்துக்களை இட்டு வலைப்பூவில் போட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது..

ஒருவேளை, வலைப்பூ என்பதே எல்லா இடத்திலும் கவிதைகள் பிரசுரம் ஆகாமல் திருப்பி அனுப்பப்பட்ட ஒரு கவிஞனின் கண்டுபிடிப்பாக இருக்குமோ என்று தோன்றுகிறது? நம் படைப்புகளை எவனும் வெளியிட வேண்டாம்.. நாமே வெளியிட்டுக்கொள்ளலாம்.. நிராகரிப்பே கிடையாது... யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

நான் முதல் முதலாக (முதலும் கடைசியுமாக) பரிசு பெற்றது இந்தக் கவிதைக்குதான்.. பதினொன்றாம் வகுப்பில், பள்ளி ஆண்டு விழா கவிதைப் போட்டிக்காக எழுதிய கவிதை இது.. மூன்று தலைப்புகள் கொடுத்திருந்தார்கள்.. ஒன்று அப்பொழுது குஜராத்தில் நிகழ்ந்திருந்த கொடிய இயற்கை பேரழிவு - பூகம்பம் பற்றியது, மற்றொன்று அமரகவி பாரதி பற்றி, மூன்றாம் தலைப்பு நினைவில் இல்லை.

பாரதியை பற்றி எழுதுவதுதான் என் முதல் எண்ணம்.. பிறகு எவ்வளவு எழுதினாலும் ஏற்கனவே எங்கோ யாரோ எழுதியது போலவே எனக்கு ஓர் உணர்வு.. மிகவும் கிளிஷே வாகவே கருத்துக்கள் தோன்றிக்கொண்டிருந்தன... மீசைவைத்தவன், முண்டாசுக் கவிஞன்.. என்றெல்லாம்... பிறகு இந்த தலைப்பை தேர்ந்து எடுத்தேன்...

கடுமையான போட்டி என்று கூற இயலாது. அனால், ஆண்டுவிழாவிற்கு தமிழ் வாத்தியாரும், சமஸ்க்ரித வாத்தியாரும் சமர்பித்த நாடகங்கள் நிராகரிக்கப்பட்டு, நான் எழுதிய நாடகம் தேர்வு செய்யப்பட்ட நேரம் அது. இருவரும் என் மீது கொஞ்சம் அதிகமாகவே துவேஷத்தில் இருந்தனர்.

தமிழாசிரியர் உயர்திரு . புகழேந்தி எனப்படுகின்ற சீனிவாசன் எனப்படுகின்ற திரு . அஸ்வின் அப்பா என்னை தேர்ந்தெடுக்கக்கூடாது என்று கொஞ்சம் ரொம்பவே கடுப்பில் இருந்தார்; வெங்கடகிருஷ்ணனுக்கு பரிசு வாங்கித்தர வேண்டும், என்பதில் சமஸ்க்ரித ஆசான் மிகக் குறியாகி, அவரே கவிதை வரிகளையும் எழுதி தந்திருந்தார். நல்லவேளை!

அதிர்ஷ்டவசமாக இவர்கள் இருவருமே தேர்வு செய்யும் நடுவர்களாக இல்லை, திருமதி . கர்னாம்பாள் என்றழைக்கப்பட்ட, கிருபாகாந்த் அம்மாவாகிய, எங்கள் வேதியல் ஆசிரியை வெற்றிக் கவிதையை தேர்வு செய்தார்.மறக்காமல், கவிதையின் கடைசி வரிக்காகத்தான் இந்த பரிசு என்பதையும், இந்த ஆர்வத்தை படிப்பிலும் காட்டினால் உருப்படுவேன் என்பதையும் கூறி வாழ்த்தினார்.

இன்னொரு அழகான கொயின்சிடன்ஸ் , ஆண்டுவிழா நாடகத்தில் பாரதி வேடம் ஏற்றதால், கவிதைப் போட்டியில் பரிசு பெற என் பெயரை அழைத்ததும் மேடைக்கு பாரதி வேடத்திலேயே சென்றதைக் கண்டு கூட்டம் சிரிப்பும் ஆரவாரமும் கொண்டது... என் முதல் பரிசுக் கவிதை, முதல் பரிசையே பெற்றது....

இப்பொழுது படித்து பார்க்கையில் எனக்கே ரொம்ப 'காமெடி ' யாக இருக்கிறது.. கிட்டத்திட்ட சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதை... இன்று இதைப் படிக்கையில் சிரிப்புக் கவிதையாக இருக்கிறது... எனிவே... படியுங்கோள் ...


இதயத்தில் பூகம்பம்...
(தலைப்பு?...ஹ்ம்ம்.. )

பூமித்தாயே !,

உன் வாளின் கூர்மை சோதிக்க,
பூக்கள்தானா கிடைத்தன?
(ரொம்ப வைரமுத்து படித்து, கேட்டு உணர்ச்சிவசப்பட்டிருந்த காலம் அது... :-) )

உன் கனலின் வெப்பம் சோதிக்க,
பனித்துளிகள்தானா கிடைத்தன?

உன் பிள்ளைகள் மீது உனக்கே
ஏன் இந்த கோபம் ?

இரு,... இரு,...

(இது எதுக்குன்னு எனக்கும் தெரியலை..)

உன் கோபத்தின் எழுச்சியால்
ஏற்பட்ட பிளவா இது?

இல்லை, நீ குலுங்கி அழுததனால்
ஏற்பட்ட பிளவிதுவோ?
(ஐயோ... முடியலை...கவிஞர் பொங்குராராம்.)

நீ தலை தட்டி கண்டிக்க
ஆயிரம் வழிகள் இருக்கிறதே;

நீ வருத்தத்தை வெளிப்படுத்த
ஆயிரம் முறைகள் இருக்கிறதே;
(அண்ணாமலை படத்து டயலாக் தானே இது?)

அதையெல்லாம் விடுத்து
ஏன் இந்த அழிவு வழி?

உன் வருத்தத்தை வெளிப்படுத்த,
அளித்தாயோ பிரிவு வலி?

(வழி, வலி ...அடடடடா....)

போதும் தாயே !,
நிறுத்திவிடு உன் தாண்டவத்தை இனியாவது!,
உன் கோபம் எனும் முகமூடி வினையானது..

எச்சரிக்கிறேன் நிறுத்திவிடு பூமிப்பாவை,
இல்லை என் கவிதைத் தீயில் எரிந்தே போவாய்... !
(ஹ்ம்ம்.. பூமியை எரிச்சிட்டு தலைவர் வேற எங்க போவாராம்?)






பி. கு. அஸ்வின் அப்பா, கிருபாகாந்த் அம்மா, என்றெல்லாம் ஆசிரியர்களுக்குபட்டப் பெயர் வைத்திருப்பதற்கு மிக மிக சுவாரஸ்யமான காரணங்கள்இருக்கின்றன... அவை பற்றி வேறோருசமயம் வாய்ப்பு அமைகையில் கூறுகிறேன்..

Monday, April 19, 2010

முடிவுறா கவிதைகள்....1

முன் குறிப்பு:

நீண்ட நாட்களாக .. மிக நீண்ட நாட்களாக நான் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த பதிவு.

இந்திரா படத்தில் வரும் 'தொடத் தொட மலர்ந்ததென்ன...' என்ற பாட்டினை ஒரு முறை (முதல் முறை ) கேட்ட பொது தோன்றிய ஒரு வரி.. அது மனதிலேயே கிடந்து ஒற்றைச் சிறகாக அலைபாய்ந்து இன்று வடிவம் பெற்று இருக்கிறது.

தொடத் தொட.. மெட்டினில் நான் எழுதி இருக்கிற பாடல்.. சில வரிகள் மிகையாக உள்ளன. எனக்கே தெரிகிறது. என் மனதில் வருடக் கணக்காக நெருடி இருந்தவை இரண்டே வரிகள்தான்.. ஆரம்பமும் இல்லாத, முடிவும் இல்லாத அந்த வரிகளை இட முடியாது என்பாதால் மொத்த பாடலையும் ரீமிக்ஸ் போல ரி - ரைட் செய்திருக்கிறேன்... பாடிப் பார்த்து ரசிக்கவும்.

கருத்துகளை மிக மிக எதிர் பார்க்கிறேன்.

situation எனப்படும் இந்த பாடலின் சந்தர்ப்பம், ஏறக்குறைய அசலின் நிலைதான். கொஞ்சம் modern தலைவன்/ தலைவி. இன்று நாம் காணும் கல்லூரி மக்கள். கொஞ்சம் தமிழ் ஆர்வம் உள்ளவர்கள்.

தலைவன்/ தலைவி கல்லூரி பருவம் முதல் பிரியாமல் இருக்கின்றனர். அதிகபட்சம்10 நாட்கள் சொந்த ஊருக்கு போகும்போது பார்க்காமல் இருந்திருப்பர்.

இப்பொழுது தலைவன் / தலைவி படிப்பிற்காகவோ, வேலைக்காகவோ வெளிநாடு/ நெடுந்தொலைவு போக வேண்டிய சூழல். விட பெற வருகிறான்/ வருகிறாள்... வருந்தி அழுது, மீண்டும் ஒருவர் மற்றவர்க்கு ஆறுதல் கூறி ,தங்கள் நிலையை நினைத்து பாடுகின்றனர்...

( குள் கொடுக்கப்பட்டிருப்பவை நிஜ பாடலின் வரிகள்.. மெட்டு புரிவதற்காக.. )

:பல்லவி :

ஆண் : (தொடத் தொட...)

விட்டு விடச் சம்மதமா
நிலவு.....
விண்ணை விட்டு நிலம் செலுமா...?

பெண்: (தொடத் தொட...)
விட்டுச் செல்ல மனம் வருமா
உயிரை .....
விட்டு விட்டு உடல் வருமா.....?

ஆண்: (பார்வைகள் புதிதா...)

பிரிவென்ன நிலையா ,
இணைந்திடல் இலையா?
ஒவ்வொரு பிரிவிலும்
அழுகை என்ன?


பெண்: (பார்வைகள் புதிதா...)

நினைவுகள் தொலைவா
நெஞ்சம்தான் தொலைவா?
தெரிந்தும் அலைகளின்
ஓல மென்ன?

ஆண் : (தொடத் தொட...)

விட்டு விடச் சம்மதமா
நிலவு
விண்ணை விட்டு நிலம் செல்லுமா?



: சரணம் :

ஆண்: (அந்த இள வயதில்...)

சொல்லித்தந்த பாடம்
அள்ளித் தந்த பாசம்
அத்தனையும் காற்றோடு
கரைந்திடுமா....

பெண்: (நந்தவனக் கரையில்...)

பெண்மை தந்த நெஞ்சம்
உண்மை சொல்ல கெஞ்சும்
காதலின் கணங்கள்தான்
மறைந்திடுமா...

ஆண்: (காதலர் தீண்டாத...)

பிரிவது நிலை அல்ல
புரிந்திடு என்றேனே ..

பெண்: (இடைவெளி தாண்டாதே...)

கண்-நீரின்றி , விடை கேளு
விடை தருவேன் நானே..

ஆண்: (தொடத் தொட...)

விட்டுச் செல்ல மனம் வருமா
உயிரை .....
விட்டு விட்டு உடல் வருமா...

பெண் : (தொடத் தொட...)

உயிர் வரை உனை நிறைத்தேன்,
அன்பே....
வரும் வரை உயிர் கசிவேன்...



: சரணம் ௨:

ஆண்: ( பனிதனில் குளித்த...)

மொட்டுவிடும் இரவில்
பட்டுவிடும் தொலைவில்
தொட்டனைக்க தோன்றாமல்
விலகி நின்றோம் ..

பெண்: ( பசித்தவன் அமுதம்...)

ஆயிரம் பேர் நடுவில்
சூழும் ஜனச் சுழலில்
தள்ளி நிற்க முடியாமல்
உயிர் வெறுத்தோம் ...

ஆண் & பெண்: (தொடத் தொட...)
விட்டுச் செல்ல மனம் வருமா
உயிரை .....
விட்டு விட்டு உடல் வருமா...

Saturday, April 03, 2010

--


மு . கு. குளியலுக்கு செல்லும் முன் 'சுட்டும் விழிச்சுடர்தான் ' பாரதியார் பாடலை ஹரிஹரன்குரலில் பருகிய போதையில் , குளியலின்போது படபடவென தோன்றின கீழுள்ளவை ...

சூடு நன்றாகவே விழுந்துள்ளதாக பெருமை பட்டுக்கொள்ளும் இந்த பூனை, அதே ராகம், தாளம், குரலை கற்பனை செய்து எழுதிய வரிகள்.. எனக்கு மிகவும் பிடித்துஎழுதிய கவிதைகளுள் ஒன்று... உங்கள்கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன்...



--
ஆட்கொள்வையோ தோழி....



தொட்டு விடும் தொலைவோ என்றே நிலவு அருகுதடி- உன்
பட்டவிழ்த்த உடலோ எனவே நினைவு மருகுதடி..

உன் கன்னச் சுழல் குழியில், என் முத்தங்கள் நட்டுஅவை -உன் ,
சின்ன இதழ்பூத் - தென்னைச்சேரும் கனவு கண்டேன்...

இட்டு நிரப்பிவிட, கடல் எட்டும் பற்றாத - என்
ஆசை குமிழ் மனதுன் (ஒரு) மூச்சினில் நிறையுதடி ...

விண்ணைக் கொளுத்தும் கதிர்- கூட உன்போ லெரிக்கவில்லை
என் உள்ளம் எரித்தாடும், நிலவே - கொஞ்சமும் இறக்கமுண்டோ?

பதின் -சித்திகள் வேண்டாமடி, அடியே , முக்திகள் வேண்டாமடி...
காற்றினிலே கலந்து- உன்னைக் கண்டிருந்தால் போதும்...

ஆட்கொள்வையோ தோழி - நீ , என்திசை கண் அசைந்து - அல்ல
தாட்கொல்வையோ தோழீ - தென் திசை எனக்கிசைந்து...

தொட்டு விடும் தொலைவோ என்றே நிலவு அருகுதடி- உன்
பட்டவிழ்த்த உடலோ எனவே நினைவு மருகுதடி.... (௨)








பி.கு. பின் குறிப்பாக கொடுக்காமல், முன் குறிப்பு கொடுத்த காரணம், என்ன எதுஎன்று அறிவிப்பின்றி மேலுள்ள கவிதையை படித்துப் பார்த்தல் ஒன்றும் புரியுமா என்ற பயம் .. ஹீ ஹீ... :-) நன்றி...


Thursday, January 14, 2010

சத்தியமா இது ஒரு கவிதை....

வந்துடுச்சு வந்துடுச்சு புத்தாண்டு
௨000 முடிஞ்சு - ஆச்சு பத்தாண்டு ...

வயசாச்சு வயசாச்சு ௨௬(இருவத்தாறு..)
உருப்படியா என்ன செஞ்ச திரும்பிப்பாரு...

கண்ணமூடும் நிமிஷத்துல கானாப்போகும்- நீ
முழிச்சிக்காட்டி இந்த வர்ஷமும் வீனாப்போகும்...

சாப்பாட்டுல உப்பில்லாட்டி உள்ள போகாது - அதுவே
தண்ணியில உப்பிருந்தா வேலைக்காகாது...

பல்லி உன் தலையில விழுந்தா பஞ்சாங்கம் பார்ப்பா , -ஆனா
பல்லி தலையில நீ விழுந்தா பாஞ்சாமிர்த்த(ம்) மாப்பா ...

அதனால -

இடம், பொருள், ஏவல், வவ்வால் நீ தெரிஞ்சிக்கடா,
பழையப் பஞ்சாங்க உதார் எல்லாம் நீ புரிஞ்சிக்கடா ...

எப்பிடி இருக்கு, எப்பிடி இருக்கு நா எழுதுன கவிதை?
யோசிச்சு- பதில் சொல்லு, இல்ல உழுந்திடு(ம்) ஒதை....

தடி எடுத்தவன் எல்லாருமே இப்ப தண்டால் காரன் ,
அவன் நாலு வார்த்தை எழுதுனாலே கவிதையின்றானே ?

Monday, December 14, 2009

என் கிராமம்..

அதிகாலை ரயிலின் அரைநிமிட
கடத்தலில், முன்பு கண்படும்
தாவணிக் குயில்கள் - இன்று
Nighty Nightingale-கள் ஆகிவிட்டன ..

கூரைச் சேவலின் கம்பீரக்
கூவல்கள் - நேற்று முளைத்த
Sattelite-குடையின் Sun Music
சப்தத்தில் அடங்கி விட்டன ..

ஆத்தா இடுகின்ற வெங்காய
வத்தல் சுமைகள் தவிர்க்க
packet chips சுவைக்கு பிஞ்சு
நாவுகள் பழகிவிட்டன..

பச்சை கதிர்கள் வளைந்து
நின்ற விளைவயல்கள்,
concrete வீடுகள் நிமிர்ந்து
நிற்கும் 'நகர்'-களாகி விட்டன..

ஆனால் மாடும், மனிதனும்
ஒன்றாய் குளித்து , ஒரு கரையில்
குடலினை கழுவி, மறு கரையில்
குடத்தினில் நிரப்பிச் செல்லும்
சமத்துவம் மட்டும் இன்னும் அப்படியே...


Monday, July 20, 2009

வருக வருக தௌலத் அவர்களே !!!!

Dhoulath has finally started a blog. :-)

Blog Name:

"திருடிய கவிதைகள்"

Caption :

"என் இதயத்தை திருடிய கவிதைகள் " -நு போட்டு என் இதயத்தை touch பண்ணிட்டா..

Link:

http://ThirudiaKavidhaikal.blogspot.com

ஹ்ம்ம்... அனைவரும் படிங்க , முகம் தெரியா அந்த கவிஞர்(களை) பாராட்டுங்க...... :-)

Sunday, April 12, 2009

....சிறையில்

மலர்கள்?
மனங்கள்?



(கீழுள்ள படத்தோடு படிக்கவும்)

அமுதனின் கவிதை









தினமும் என் கண்ணில் படும் காட்சி இது... இதை பார்க்கும் பொழுது எல்லாம்
அமுதன் தமிழ் வகுப்பில் எழுதிய கவிதை தான் என் நினைவுக்கு வருகிறது ..
அமுதன்,கவிதை நினைவிருந்தால் எழுது...

Monday, March 16, 2009

புரியாத புதிர்...




உடல்கள் வேறுவேறானாலும்
தலை எப்பொழுதும்
ஒன்றாய் மட்டுமே
இருக்கும் என் காதல்.....?



மேலுள்ள புதிர் புரிந்தோர்க்கு
என் நிலை புரியும்.... :-(
புரிந்தோர் விடை அளிக... :-)

Tuesday, March 10, 2009

வலைப்பதிவுகள்.. (blogs)



பிறரை விட
நன்றாய் எழுதுவேன்
என்கிற கர்வம் கொஞ்சம்
வேகமாகவே 
வெளியேறி அந்த இடத்தில் வெட்கம் 
நிரம்பிக்கொண்டது...