Monday, April 26, 2010

Pretty Woman....

Pretty Woman... please love me,
Pretty Woman... it's destiny,
Pretty Woman... just u n me,
Pretty Woman... we've a history,

Pretty Woman.....

Pretty Woman... it's just crazy,
Pretty Woman... it's not easy,
Pretty Woman... dun make me cry,
Pretty Woman... dun let me die,

Pretty Woman...

Pretty Woman... where is you,
Pretty Woman... I miss you,
Pretty Woman... hear my song,
Pretty Woman... don't be long,

Pretty Woman...
Lovely,
Pretty Woman..
Pretty,
Pretty Woman..

ma loving,
Pretty Woman..

am lonely,
Pretty Woman.......


Thursday, April 22, 2010

முதல் பரிசுக் கவிதை...

அதிகாலை எழுந்து விட்டதால் என்ன செய்வது என்று அறியாமல், தூங்கவும் மனம் இல்லாமல் என் பழைய கவிதை நோட்டுகள் / துண்டுக் காகிதங்கள் ஆகியவற்றை பிரித்து மீண்டும் பலவருடங்களுக்கு முன்னாள் கவிதை எழுதும் ஆர்வக்கோளாரில் கொண்டு கண்டதையெல்லாம் எழுதிச் சேர்த்து வைத்திருந்த கிறுக்கல்களை ஆராய்ந்தேன்... இப்படி அடிக்கடி செய்வது ஒரு அழகான உணர்வு ...

அதில் சில கவிதைகளை வலைப்பூவில் இடவேண்டும் என்று தோன்றிற்று .. சில அவைகளின் நயத்திற்காக, பல நகைப்புகாக.. நிறைய கவிதைகள் சில்லியாக இருக்கின்றன.. அவற்றின் கதைகளைக் கூறி, அவற்றைப் பற்றி இப்பொழுது தோன்றும் கருத்துக்களை இட்டு வலைப்பூவில் போட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது..

ஒருவேளை, வலைப்பூ என்பதே எல்லா இடத்திலும் கவிதைகள் பிரசுரம் ஆகாமல் திருப்பி அனுப்பப்பட்ட ஒரு கவிஞனின் கண்டுபிடிப்பாக இருக்குமோ என்று தோன்றுகிறது? நம் படைப்புகளை எவனும் வெளியிட வேண்டாம்.. நாமே வெளியிட்டுக்கொள்ளலாம்.. நிராகரிப்பே கிடையாது... யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

நான் முதல் முதலாக (முதலும் கடைசியுமாக) பரிசு பெற்றது இந்தக் கவிதைக்குதான்.. பதினொன்றாம் வகுப்பில், பள்ளி ஆண்டு விழா கவிதைப் போட்டிக்காக எழுதிய கவிதை இது.. மூன்று தலைப்புகள் கொடுத்திருந்தார்கள்.. ஒன்று அப்பொழுது குஜராத்தில் நிகழ்ந்திருந்த கொடிய இயற்கை பேரழிவு - பூகம்பம் பற்றியது, மற்றொன்று அமரகவி பாரதி பற்றி, மூன்றாம் தலைப்பு நினைவில் இல்லை.

பாரதியை பற்றி எழுதுவதுதான் என் முதல் எண்ணம்.. பிறகு எவ்வளவு எழுதினாலும் ஏற்கனவே எங்கோ யாரோ எழுதியது போலவே எனக்கு ஓர் உணர்வு.. மிகவும் கிளிஷே வாகவே கருத்துக்கள் தோன்றிக்கொண்டிருந்தன... மீசைவைத்தவன், முண்டாசுக் கவிஞன்.. என்றெல்லாம்... பிறகு இந்த தலைப்பை தேர்ந்து எடுத்தேன்...

கடுமையான போட்டி என்று கூற இயலாது. அனால், ஆண்டுவிழாவிற்கு தமிழ் வாத்தியாரும், சமஸ்க்ரித வாத்தியாரும் சமர்பித்த நாடகங்கள் நிராகரிக்கப்பட்டு, நான் எழுதிய நாடகம் தேர்வு செய்யப்பட்ட நேரம் அது. இருவரும் என் மீது கொஞ்சம் அதிகமாகவே துவேஷத்தில் இருந்தனர்.

தமிழாசிரியர் உயர்திரு . புகழேந்தி எனப்படுகின்ற சீனிவாசன் எனப்படுகின்ற திரு . அஸ்வின் அப்பா என்னை தேர்ந்தெடுக்கக்கூடாது என்று கொஞ்சம் ரொம்பவே கடுப்பில் இருந்தார்; வெங்கடகிருஷ்ணனுக்கு பரிசு வாங்கித்தர வேண்டும், என்பதில் சமஸ்க்ரித ஆசான் மிகக் குறியாகி, அவரே கவிதை வரிகளையும் எழுதி தந்திருந்தார். நல்லவேளை!

அதிர்ஷ்டவசமாக இவர்கள் இருவருமே தேர்வு செய்யும் நடுவர்களாக இல்லை, திருமதி . கர்னாம்பாள் என்றழைக்கப்பட்ட, கிருபாகாந்த் அம்மாவாகிய, எங்கள் வேதியல் ஆசிரியை வெற்றிக் கவிதையை தேர்வு செய்தார்.மறக்காமல், கவிதையின் கடைசி வரிக்காகத்தான் இந்த பரிசு என்பதையும், இந்த ஆர்வத்தை படிப்பிலும் காட்டினால் உருப்படுவேன் என்பதையும் கூறி வாழ்த்தினார்.

இன்னொரு அழகான கொயின்சிடன்ஸ் , ஆண்டுவிழா நாடகத்தில் பாரதி வேடம் ஏற்றதால், கவிதைப் போட்டியில் பரிசு பெற என் பெயரை அழைத்ததும் மேடைக்கு பாரதி வேடத்திலேயே சென்றதைக் கண்டு கூட்டம் சிரிப்பும் ஆரவாரமும் கொண்டது... என் முதல் பரிசுக் கவிதை, முதல் பரிசையே பெற்றது....

இப்பொழுது படித்து பார்க்கையில் எனக்கே ரொம்ப 'காமெடி ' யாக இருக்கிறது.. கிட்டத்திட்ட சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதை... இன்று இதைப் படிக்கையில் சிரிப்புக் கவிதையாக இருக்கிறது... எனிவே... படியுங்கோள் ...


இதயத்தில் பூகம்பம்...
(தலைப்பு?...ஹ்ம்ம்.. )

பூமித்தாயே !,

உன் வாளின் கூர்மை சோதிக்க,
பூக்கள்தானா கிடைத்தன?
(ரொம்ப வைரமுத்து படித்து, கேட்டு உணர்ச்சிவசப்பட்டிருந்த காலம் அது... :-) )

உன் கனலின் வெப்பம் சோதிக்க,
பனித்துளிகள்தானா கிடைத்தன?

உன் பிள்ளைகள் மீது உனக்கே
ஏன் இந்த கோபம் ?

இரு,... இரு,...

(இது எதுக்குன்னு எனக்கும் தெரியலை..)

உன் கோபத்தின் எழுச்சியால்
ஏற்பட்ட பிளவா இது?

இல்லை, நீ குலுங்கி அழுததனால்
ஏற்பட்ட பிளவிதுவோ?
(ஐயோ... முடியலை...கவிஞர் பொங்குராராம்.)

நீ தலை தட்டி கண்டிக்க
ஆயிரம் வழிகள் இருக்கிறதே;

நீ வருத்தத்தை வெளிப்படுத்த
ஆயிரம் முறைகள் இருக்கிறதே;
(அண்ணாமலை படத்து டயலாக் தானே இது?)

அதையெல்லாம் விடுத்து
ஏன் இந்த அழிவு வழி?

உன் வருத்தத்தை வெளிப்படுத்த,
அளித்தாயோ பிரிவு வலி?

(வழி, வலி ...அடடடடா....)

போதும் தாயே !,
நிறுத்திவிடு உன் தாண்டவத்தை இனியாவது!,
உன் கோபம் எனும் முகமூடி வினையானது..

எச்சரிக்கிறேன் நிறுத்திவிடு பூமிப்பாவை,
இல்லை என் கவிதைத் தீயில் எரிந்தே போவாய்... !
(ஹ்ம்ம்.. பூமியை எரிச்சிட்டு தலைவர் வேற எங்க போவாராம்?)






பி. கு. அஸ்வின் அப்பா, கிருபாகாந்த் அம்மா, என்றெல்லாம் ஆசிரியர்களுக்குபட்டப் பெயர் வைத்திருப்பதற்கு மிக மிக சுவாரஸ்யமான காரணங்கள்இருக்கின்றன... அவை பற்றி வேறோருசமயம் வாய்ப்பு அமைகையில் கூறுகிறேன்..

Monday, April 19, 2010

முடிவுறா கவிதைகள்....1

முன் குறிப்பு:

நீண்ட நாட்களாக .. மிக நீண்ட நாட்களாக நான் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த பதிவு.

இந்திரா படத்தில் வரும் 'தொடத் தொட மலர்ந்ததென்ன...' என்ற பாட்டினை ஒரு முறை (முதல் முறை ) கேட்ட பொது தோன்றிய ஒரு வரி.. அது மனதிலேயே கிடந்து ஒற்றைச் சிறகாக அலைபாய்ந்து இன்று வடிவம் பெற்று இருக்கிறது.

தொடத் தொட.. மெட்டினில் நான் எழுதி இருக்கிற பாடல்.. சில வரிகள் மிகையாக உள்ளன. எனக்கே தெரிகிறது. என் மனதில் வருடக் கணக்காக நெருடி இருந்தவை இரண்டே வரிகள்தான்.. ஆரம்பமும் இல்லாத, முடிவும் இல்லாத அந்த வரிகளை இட முடியாது என்பாதால் மொத்த பாடலையும் ரீமிக்ஸ் போல ரி - ரைட் செய்திருக்கிறேன்... பாடிப் பார்த்து ரசிக்கவும்.

கருத்துகளை மிக மிக எதிர் பார்க்கிறேன்.

situation எனப்படும் இந்த பாடலின் சந்தர்ப்பம், ஏறக்குறைய அசலின் நிலைதான். கொஞ்சம் modern தலைவன்/ தலைவி. இன்று நாம் காணும் கல்லூரி மக்கள். கொஞ்சம் தமிழ் ஆர்வம் உள்ளவர்கள்.

தலைவன்/ தலைவி கல்லூரி பருவம் முதல் பிரியாமல் இருக்கின்றனர். அதிகபட்சம்10 நாட்கள் சொந்த ஊருக்கு போகும்போது பார்க்காமல் இருந்திருப்பர்.

இப்பொழுது தலைவன் / தலைவி படிப்பிற்காகவோ, வேலைக்காகவோ வெளிநாடு/ நெடுந்தொலைவு போக வேண்டிய சூழல். விட பெற வருகிறான்/ வருகிறாள்... வருந்தி அழுது, மீண்டும் ஒருவர் மற்றவர்க்கு ஆறுதல் கூறி ,தங்கள் நிலையை நினைத்து பாடுகின்றனர்...

( குள் கொடுக்கப்பட்டிருப்பவை நிஜ பாடலின் வரிகள்.. மெட்டு புரிவதற்காக.. )

:பல்லவி :

ஆண் : (தொடத் தொட...)

விட்டு விடச் சம்மதமா
நிலவு.....
விண்ணை விட்டு நிலம் செலுமா...?

பெண்: (தொடத் தொட...)
விட்டுச் செல்ல மனம் வருமா
உயிரை .....
விட்டு விட்டு உடல் வருமா.....?

ஆண்: (பார்வைகள் புதிதா...)

பிரிவென்ன நிலையா ,
இணைந்திடல் இலையா?
ஒவ்வொரு பிரிவிலும்
அழுகை என்ன?


பெண்: (பார்வைகள் புதிதா...)

நினைவுகள் தொலைவா
நெஞ்சம்தான் தொலைவா?
தெரிந்தும் அலைகளின்
ஓல மென்ன?

ஆண் : (தொடத் தொட...)

விட்டு விடச் சம்மதமா
நிலவு
விண்ணை விட்டு நிலம் செல்லுமா?



: சரணம் :

ஆண்: (அந்த இள வயதில்...)

சொல்லித்தந்த பாடம்
அள்ளித் தந்த பாசம்
அத்தனையும் காற்றோடு
கரைந்திடுமா....

பெண்: (நந்தவனக் கரையில்...)

பெண்மை தந்த நெஞ்சம்
உண்மை சொல்ல கெஞ்சும்
காதலின் கணங்கள்தான்
மறைந்திடுமா...

ஆண்: (காதலர் தீண்டாத...)

பிரிவது நிலை அல்ல
புரிந்திடு என்றேனே ..

பெண்: (இடைவெளி தாண்டாதே...)

கண்-நீரின்றி , விடை கேளு
விடை தருவேன் நானே..

ஆண்: (தொடத் தொட...)

விட்டுச் செல்ல மனம் வருமா
உயிரை .....
விட்டு விட்டு உடல் வருமா...

பெண் : (தொடத் தொட...)

உயிர் வரை உனை நிறைத்தேன்,
அன்பே....
வரும் வரை உயிர் கசிவேன்...



: சரணம் ௨:

ஆண்: ( பனிதனில் குளித்த...)

மொட்டுவிடும் இரவில்
பட்டுவிடும் தொலைவில்
தொட்டனைக்க தோன்றாமல்
விலகி நின்றோம் ..

பெண்: ( பசித்தவன் அமுதம்...)

ஆயிரம் பேர் நடுவில்
சூழும் ஜனச் சுழலில்
தள்ளி நிற்க முடியாமல்
உயிர் வெறுத்தோம் ...

ஆண் & பெண்: (தொடத் தொட...)
விட்டுச் செல்ல மனம் வருமா
உயிரை .....
விட்டு விட்டு உடல் வருமா...

Tuesday, April 13, 2010

ஊட்டி விடுமுறை....

தலைப்பை பார்த்த உடனே குழந்தைகளுக்கு சோறு ஊட்டி விடும் முறைகள் பற்றி கூறப் போகிறான் என்று தப்பாக புரிந்து கொள்ளாதவர்களுக்கு எனது வணக்கங்கள்..

நிறைய நாட்கள் கழித்து எனது பள்ளி நண்பர்களுடன் சுற்றுலா செல்லக் கிட்டியது. காதல் , நட்பு, பாசம் என பலவும் கண்டு, உணர்ந்து ,அனுபவித்தேன். இதில் காதல் - என் நண்பர்களின் காதல்..

கேயன், அரவிந்த் இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள்.. கேயனுடயது பத்து வருடக் காதல் என்றால் , அரவிந்தனுடயது பத்தாவது காதல் என்று சொல்லலாம்.. கணவன், மனைவி என்னும் உறவினை தாண்டி அவர்கள் தம் மனைவியருடன் நண்பர்களாக வாழ்வது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. மாஷா அல்லா . :-)

சரவணனின் காதல் ஒரு புறம். ஓயாமல் போனில் பேசிகொண்டே இருந்ததும், அவன் காதலி அழுவதும், புலம்புவதும் ,ஆராற்றுவதும், அதனை இவன் சாமாதம் செய்து கொஞ்சி ,கெஞ்சி அமைதிப் படுத்துவதும்... எங்களுக்கு சிரிப்பு..

நட்பு. திருமணம் ,வயது, வேலை, எல்லாவற்றையும் தாண்டி இன்னும் மாறாதிருக்கும் பள்ளித் தோழர்களின் நட்பு . எல்லோரிடமும் குறைகள் உண்டு.எங்களிடமும். ஆனால் அதை எல்லாம் மீறி அடிப்படையில் நல்லவர்கள் .
அரவிந்த் இன்னும் இரண்டாம் வகுப்பில் என்னைப் பார்த்து நுழைவுத் தேர்வெழுதி , என்னை விட இரண்டு ரேன்க் முன்னாள் வந்ததை வாஞ்சையோடு கூறிக்கொண்டு இருக்கிறான்..

கார்த்தி எனப்படும் கேயன்.. வாய் தவறி யாரும் அவனை ஒளி என்றோ, என்னை கேயா என்றோ அழைத்துவிட்டால் எங்களுக்குள் இன்னும் சிரிப்புதான்... பள்ளியில் எங்கள் இருவரில் யார் கேயன், யார் ஒளி என்றாய் பிரித்துக் காண முடியாத அளவுக்கு ஒட்டித் திரியும் ரெட்டையராய் இருந்தோம்..

அழாகான சிரிப்புகள்.. விளையாட்டில் போட்டி.. கோபம்.. எல்லாமே நன்றாக இருந்தது.. நவம்பர் மாதம் மாமா (தினேஷ் ) , நான் , பார்த்தது, ஆபத்தான, அமைதியான, பலருக்கும் காணக் கிடைக்காத ஊட்டி. இம்முறை வழக்கமான, ஆபத்தில்லாத விடுமுறை ஊட்டி.

கொஞ்சம் தீர்த்தம். கொஞ்சம் யாகம். புண்ணியம் சேர்த்துக்கொண்டேன் என் கணக்கில். ரயில் பயணம் - அழகு .

போதுமான முறை தோற்றால், தோல்வியையும் வெற்றியையும் ஒரே போன்று பார்க்கும் பக்குவும் ஏற்பபட்டுவிடும். எனக்கு ஏற்பட்டுவிட்டாயிற்று.

விரும்புபவர்களை நோகடிப்பதும், வெறுப்பவர்களை மன்னிப்பதும் சுலபமாக இருக்கிறது என்று முன்பே ஒரு முறை கூறி இருந்தேன்.. மீண்டும் மீண்டும் நிரூபணம்.

சுஜாதா நாடகங்கள் முழு தொகுப்பு புத்தகம் வாங்கி இருந்தேன்.. என் பிறந்தநாள் வாக்கில் கையில் நிறைய காசு புழங்கியபோது.. வெகு நாட்கள் கழித்து நான் படிக்கும் புத்தகம். குளியலறைப் புண்ணியம்.

வாங்கி படிக்காமல் அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களை படித்து முடிக்க வேண்டும் என்று எண்ணம். சபதம் செய்தால் நிச்சயமாக நிறைவேற்ற மாட்டேன் என்று தெரியும். அதானால் வெறும் எண்ணம். பார்க்கலாம்.

இதற்கு மேல் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. மீண்டும் விரைவில் எழுத வேண்டுகிறேன். நன்றி. அபத்தமாக, சட்டேன்று நடுவிலேயே முடிக்கிறேன். மன்னிக்கவும்.

Saturday, April 03, 2010

--


மு . கு. குளியலுக்கு செல்லும் முன் 'சுட்டும் விழிச்சுடர்தான் ' பாரதியார் பாடலை ஹரிஹரன்குரலில் பருகிய போதையில் , குளியலின்போது படபடவென தோன்றின கீழுள்ளவை ...

சூடு நன்றாகவே விழுந்துள்ளதாக பெருமை பட்டுக்கொள்ளும் இந்த பூனை, அதே ராகம், தாளம், குரலை கற்பனை செய்து எழுதிய வரிகள்.. எனக்கு மிகவும் பிடித்துஎழுதிய கவிதைகளுள் ஒன்று... உங்கள்கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன்...



--
ஆட்கொள்வையோ தோழி....



தொட்டு விடும் தொலைவோ என்றே நிலவு அருகுதடி- உன்
பட்டவிழ்த்த உடலோ எனவே நினைவு மருகுதடி..

உன் கன்னச் சுழல் குழியில், என் முத்தங்கள் நட்டுஅவை -உன் ,
சின்ன இதழ்பூத் - தென்னைச்சேரும் கனவு கண்டேன்...

இட்டு நிரப்பிவிட, கடல் எட்டும் பற்றாத - என்
ஆசை குமிழ் மனதுன் (ஒரு) மூச்சினில் நிறையுதடி ...

விண்ணைக் கொளுத்தும் கதிர்- கூட உன்போ லெரிக்கவில்லை
என் உள்ளம் எரித்தாடும், நிலவே - கொஞ்சமும் இறக்கமுண்டோ?

பதின் -சித்திகள் வேண்டாமடி, அடியே , முக்திகள் வேண்டாமடி...
காற்றினிலே கலந்து- உன்னைக் கண்டிருந்தால் போதும்...

ஆட்கொள்வையோ தோழி - நீ , என்திசை கண் அசைந்து - அல்ல
தாட்கொல்வையோ தோழீ - தென் திசை எனக்கிசைந்து...

தொட்டு விடும் தொலைவோ என்றே நிலவு அருகுதடி- உன்
பட்டவிழ்த்த உடலோ எனவே நினைவு மருகுதடி.... (௨)








பி.கு. பின் குறிப்பாக கொடுக்காமல், முன் குறிப்பு கொடுத்த காரணம், என்ன எதுஎன்று அறிவிப்பின்றி மேலுள்ள கவிதையை படித்துப் பார்த்தல் ஒன்றும் புரியுமா என்ற பயம் .. ஹீ ஹீ... :-) நன்றி...